மது ஒழிப்பு தான் உண்மையான விடுதலையை அளிக்கும் -PMK!

மது ஒழிப்பும், மனித நேயமும் தான் உண்மையான விடுதலையை அளிக்கும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்!

Last Updated : Aug 14, 2019, 11:17 AM IST
மது ஒழிப்பு தான் உண்மையான விடுதலையை அளிக்கும் -PMK! title=

மது ஒழிப்பும், மனித நேயமும் தான் உண்மையான விடுதலையை அளிக்கும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிபிட்டுள்ளதாவது., "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 73-ஆவது சுதந்திர நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில் இந்திய மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. விடுதலை நாள் கொண்டாட்டம் என்பது ஒவ்வொரு ஆண்டும் வெறும் சடங்காக இருந்துவிடக்கூடாது. ஓராண்டுக்கும், அடுத்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நாடும், நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதைப் பொறுத்து தான் விடுதலை நாள் கொண்டாட்டங்களுக்கு மரியாதை  இருக்கும். இதை உணர்ந்தே மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு கடந்த 72 ஆண்டுகளில் ஈடு இணையற்ற எத்தனையோ சாதனைகளைப் படைத்திருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் பல நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டியாக திகழ்கிறது. நிலவை ஆய்வு செய்ய இரண்டாவது முறையாக சந்திராயன் விண்கலத்தை  இந்தியா செலுத்தியிருக்கிறது. அதேபோல், தகவல் தொழில்நுட்பப் புரட்சி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிற சேவைகள், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானது. இந்த வளர்ச்சி ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும். அதேநேரத்தில் இந்தியாவில் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் 20%&க்கும் கூடுதலான மக்கள் வாடுகின்றனர் என்ற செய்தி நம்மை தலைகுனிய வைக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி யாருக்கானது? என்ற வினாவை எழுப்புகிறது.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்புக்கும் பெரும் தடையாக இருப்பது மது ஆகும். அரசின் வருவாய்க்கான ஆதாரமாக மது வணிகம் நீடிப்பதை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது. அதேபோல், ராஜிவ் கொலை வழக்கில் எந்த தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக  உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் வழிகாட்டுதல்களை வழங்கியும் அவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுகிறது. இதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு நாட்டின் விடுதலை என்பது அந்த நாட்டு மக்கள், ஆக்கப்பூர்வமான விஷயங்களில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதில் தான் உள்ளது. மது அரக்கன் மூலமாக குடும்பங்கள் சீரழிவதும், தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில் மனிதநேயமின்றி 7 தமிழர்களை தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைப்பதும் விடுதலைக்கான அடையாளங்கள் அல்ல. மதுவை ஒழித்து, மனித நேயத்தை வளர்த்தெடுக்கும் நாள் தான் தமிழக மக்களுக்கு  உண்மையான விடுதலை நாள் ஆகும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், அதற்காக கடுமையாக உழைக்கவும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்தியாவின் விடுதலை நாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம்." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News