விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு மேட்டர்... மோடி போட்ட தேர்தல் வியூகம் - திமுகவின் பதில் என்ன?

Katchatheevu Issue: கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததில் புதிய உண்மைகள் வெளியாகி இருப்பதாக பிரதமர் மோடி ட்வீட்டில் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 31, 2024, 11:13 PM IST
  • பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்தார்.
  • அன்று நாடாளுமன்றத்தில் கச்சத்தீவை தாரைவார்ப்பதை எதிர்த்தது திமுக - டிகேஎஸ் இளங்கோவன்
  • இது தேர்தல் நேரத்தின் பொய் பரப்புரை என காங்கிரஸ் மற்றும் திமுக குற்றச்சாட்டு
விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு மேட்டர்... மோடி போட்ட தேர்தல் வியூகம் -  திமுகவின் பதில் என்ன? title=

Katchatheevu Issue BJP vs Congress - DMK: கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த விவகாரம் தற்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜகவினர் தங்களின் பிரச்சாரங்களில் கடந்த சில நாள்களாகவே கச்சத்தீவு பிரச்னையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக எழுப்பி வந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக பாஜக தொடர்ந்து இதுகுறித்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி இன்று காலை கச்சத்தீவு குறித்து அவரது X தளத்தில் போட்ட பதிவு தற்போது தேர்தல் களத்தில் சற்று பரபரப்பை உண்டாகி உள்ளது. 

பிரதமர் மோடி (PM Modi) அவரது தளத்தில் ஒரு பதிவில் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தொடர்பான தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை பகிர்ந்திருந்தார். 

பிரதமர் போட்ட ட்வீட்

மேலும், அந்த பதிவில்,"இது உண்மையை விளக்குகிறது மற்றும் அதிர்ச்சியை தருகிறது. கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி அத்துமீறி கொடுத்தது என்பது குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. 

இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியது மற்றும் மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் 75 ஆண்டு கால பணியாகும்" என கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது குற்றஞ்சாட்டியிருந்தார். 

மேலும் படிக்க | நாட்டை கூறு போடும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் - ஆ.ராசா

பாஜகவினரின் குற்றச்சாட்டு

தொடர்ந்து, தமிழ்நாட்டில் திமுக மீதும் கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக குற்றம் சுமத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் (L Murugan) அவரது X பதிவில்,"காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இலங்கைக்கு கச்சத்தீவை, அக்கட்சி சொந்த நலனுக்காக தாரை வார்த்தது, மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் புதிய ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

1974ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி, ஒப்பந்தம் கையெழுத்தான போது, தமிழ்நாட்டில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வந்தது. குடும்ப நலனுக்காக  கருணாநிதியும் இதனை கண்டுகொள்ளவில்லை. 

காங்கிரஸையும் திமுகவையும் மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள். இந்த இரு கட்சியும் நமது தேசத்திற்கே எதிரானவை. அவர்களை மக்கள் ஒருபோதும்  மன்னிக்க மாட்டார்கள். இந்த கும்பலின் துரோகம் தமிழர்கள் ஒவ்வொருவரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என குறிப்பிட்டிருந்தார். மேலும், மத்திய இணையமைச்சர் அமித் ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (TN BJP President Annamalai) உள்ளிட்ட பாஜக தலைவர்களும் இதனை தங்களது பக்கத்தில் பகிர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு தங்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டினர்.

மேலும் படிக்க | எங்கள பார்த்தா கட்சி இருக்காதுனு சொல்ற? பாஜகவை தாக்கிய இபிஎஸ் - கொண்டாடிய தொண்டர்கள்

'அன்று பாராட்டு, இன்று...?'

பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கும், பாஜகவினரின் கருத்துகளும் காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (Mallikarjun Kharge) இதுகுறித்து கூறுகையில்,"பிரதமர் மோடி அவர்களே, உங்கள் பத்தாண்டு தவறான ஆட்சியில் தற்போது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு நீங்கள் திடீரென்று கண் விழித்திருக்கிறீர்கள். ஒருவேளை, தேர்தல்கள் ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் விரக்தி தெளிவாக தெரிகிறது.

'இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான நில எல்லை ஒப்பந்தம் நிலத்தின் மறுசீரமைப்பு மட்டுமல்ல, இதயங்களின் சந்திப்பு பற்றியது' என நீங்கள் தான் 1974இல் இந்திரா காந்தியின் முயற்சி குறித்து பாராட்டியிருந்தீர்கள். உங்கள் அரசாங்கத்தின் கீழ், நட்பு ரீதியாக இந்தியாவில் இருந்து 111 பகுதிகள் வங்காளதேசத்திற்கு மாற்றப்பட்டன, மேலும் 55 பகுதிகள் இந்தியாவிற்கு வந்தன.

தேர்தல் நெருங்கும் நேரத்தில்...

1974ஆம் ஆண்டு, இதேபோன்ற ஒப்பந்தம், கச்சத்தீவு தொடர்பாக இலங்கையுடன் நட்புறவின் அடிப்படையில் தொடங்கப்பட்டது, அவ்வளவுதான். தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், நீங்கள் இந்த முக்கியமான விஷயத்தை எழுப்புகிறீர்கள். ஆனால் உங்கள் சொந்த அரசாங்கத்தின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி 2014ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியிருந்தார், 'கச்சத்தீவு 1974இல் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு சென்றது கொடுக்கப்பட்டது, இன்று திரும்பி எப்படி எடுக்க முடியும்? கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்றால், அதற்காக போர் தொடுக்க வேண்டும்' என்றார்" என மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க | பாஜகவில் இருக்கும் ரவுடிகளை பட்டியல் போட்டு விளாசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுகவின் பதில் என்ன?

இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் (TKS Elangovan) கூறுகையில்,"திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கருணாநிதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் அதற்கு அடுத்த நாளே பதில் அளித்தார் என பத்திரிகை செய்தியே உள்ளது. 

1974ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் வந்தபோது அதனை எதிர்த்து கடுமையாக பேசியவர் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், அப்போதைய திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவராக இருந்த  இரா.செழியன். வாஜ்பாயும் அதனை கடுமையாக எதிர்த்து பேசினார், கச்சத்தீவு என்பது இந்தியாவுக்கு சொந்தமானது, அதனை இலங்கைக்கு கொடுக்கக் கூடாது என பேசினார். 

இதுதான் நடந்தது?

ஆனால், அந்த கடல் எல்லையை இந்தியாவின் பக்கம் தள்ளிவைக்கும் ஒப்பந்தத்தில் பழைய எல்லைக்கும், புதிய எல்லைக்கு உள்ள தீவுகள் இலங்கை பக்கம் போய்விட்டது. 1976இல் அவசரநிலையின் போது முழுமையாக அது இலங்கை பக்கம் போய்விட்டது. 

10 ஆண்டுகாலம் இவர்கள் ஆட்சியில் இருந்தார்கள் அல்லவா, கச்சத்தீவை மீட்க இவர்கள் என்ன முயற்சியை எடுத்தார்கள், ஏற்கெனவே, 1998ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள் அப்போது 6 ஆண்டு காலம், இப்போது 10 ஆண்டு காலம் இதில் பாஜக கச்சத்தீவு மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது, ஒன்றும் இல்லை. அவர்கள் இலங்கை உடன் நட்பு பாராட்டுகிறார்கள், அப்போது கச்சத்தீவு இந்தியா உடையது என பேச வேண்டியது தானே...? அவர்கள் பேச மாட்டார்கள். பாஜகவினர் உள்ளூர் அரசியலுக்காக இதனை பேசுகிறார்கள். அவர்களுக்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் எல்லாம் அக்கறையில்லை. 

ஆனால் இப்போது திமுகதான் கச்சத்தீவை தாரைவார்த்தது என்ற தோற்றத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிக்கின்றனர். ராமநாதபுரம் எங்கே இருக்கிறது என்றே அண்ணாமலைக்கு இப்போதுதான் தெரியும், ஆனால் ராமநாதபுர மக்களுக்கு கச்சத்தீவு குறித்து எல்லாம் தெரியும். இது தேர்தல் களத்தில் எதிரொலிக்காது. ராமநாதபுரம் மீனவர்களை இலங்கை அரசு பிடிக்கும்போது, மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இன்றைய பிரச்னை குறித்து பேச மறுக்கிறார்கள்.

கச்சத்தீவு ஒரு நிலம், அங்கு ஒரு மாதா கோவில்தான் உள்ளது. அங்கு நம் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர், படகுகள் கைப்பற்றப்படுகின்றன அரசு அனைத்தையும் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் பொய் கூறி வாக்கு பெற வேண்டும் என்பது அவர்களின் திட்டம்" என்றார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள்... எந்த தொகுதியில் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News