10 ஆண்டுகளாக குழந்தை இல்லை... மருமகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கொடூர மாமியார்!

திருவாரூர் அருகே குழந்தை இல்லை என்பதற்காக மருமகளை இரும்பு கம்பியால் அடித்து மாமியார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 24, 2022, 11:43 AM IST
  • திருமணமாகி 10 ஆண்டுகளாக மருமகளுக்கு குழந்தை இல்லை
  • பேரனுடன் சேர்ந்து மருமகளை தீர்த்துக்கட்டிய மாமியார்
  • மாமியார், கணவர், பேரன்களை கைது செய்து விசாரணை
10 ஆண்டுகளாக குழந்தை இல்லை... மருமகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கொடூர மாமியார்! title=

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(38). இவர் ஊரில் பந்தல் மற்றும் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை வைத்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி(35) என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் குழந்தை இல்லை என்பதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனிடையே கடந்த 21-ம் தேதி தொழில் சம்பந்தமாக மகேந்திரன் வெளியூர் சென்றுள்ளார். இதனால் அன்று இரவு வீட்டை ஒட்டியுள்ள சிறிய வீட்டில் தனலட்சுமி உறங்க சென்றுள்ளார். பெரிய வீட்டில் மாமியார் ரஞ்சிதம் மற்றும் நாத்தனார் மகன்கள் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர். மறுநாள் 22-ம் தேதி காலை நீண்ட நேரமாகியும் சிறிய வீட்டிலிருந்து தனலட்சுமி எழுந்து வராததால் உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் தனக்கு எதுவும் தெரியாது என மாமியார் ரஞ்சிதம் மழுப்பலாக பதிலளித்துள்ளார். ஆனால், கணவர் மகேந்திரன், அவரது சகோதரி மகன்கள் விஜயராமன்(15) மற்றும் விநாயகத்திடம்(14) நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

போலீஸாரின் விசாரணையில் தனலட்சுமியை கொலை செய்ததை மாமியார் ரஞ்சிதம், நாத்தனார் மகன்கள் விஜயராமன் இருவரும் ஒப்புக்கொண்டனர். விஜயராமன் பட்டுக்கோட்டையில் தன் தாயாருடன் வசித்து வருகிறார். சிறுவயதிலேயே தந்தை வீட்டை விட்டு சென்றுவிட்டதால் தாயாருடன் வசித்து வந்த விஜயராமன் பள்ளி விடுமுறை காரணமாக பாட்டி ரஞ்சிதம் வீட்டிற்கு வந்துள்ளனர். 

மேலும் படிக்க | திமுக கவுன்சிலரின் உணவகமாக மாறிய அம்மா உணவகம்! மெனுவில் பூரி, வடை, ஆம்லேட், உப்புமா

கடந்த சில நாட்களுக்கு முன் மாமியார் ரஞ்சிதத்திடம் சொத்தை பிரித்துக்கொடுக்குமாறு தனலட்சுமி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது குழந்தை இல்லாத உனக்கு சொத்து எதற்கு? என ரஞ்சிதம் கேள்வி எழுப்பியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனலட்சுமியை தீர்த்துக்கட்ட ரஞ்சிதமும், பேரன் விஜயராமனும் திட்டம் தீட்டியுள்ளனர். சம்பவத்தன்று ரஞ்சிதம் மற்றும்
விஜயராமன் இருவரும் இரும்பு ராடால் அடித்து தனலட்சுமியை கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி கணவர் மகேந்திரன் மற்றும் நாத்தனாரின் மற்றொரு மகன் விநாயகம் ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் தனலட்சுமியின் நாத்தனார்கள் ரமணி தேவி, கலாதேவி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

இந்த நிலையில், கொலை செய்த மாமியார் ரஞ்சிதம் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், '' மருமகள் தனலட்சுமிக்கு 10வருடமாக குழந்தை இல்லை. இதுகுறித்து கேட்டால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும். முதல்நாள் இரவு எங்கள் இருவருக்குள் வழக்கம்போல் சண்டை ஏற்பட்டது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த நான் அன்று இரவு வேலை காரணமாக எனது மகன் வெளியில் சென்றுவிட்டதை பயன்படுத்தி இரும்பு கம்பியால் தூங்கிக்கொண்டிருந்த தனலட்சுமியின் தலையில் தாக்கினேன். வலி தாங்க முடியாமல் தனலட்சுமி சத்தம்போட்டதால் பேரன் விஜயராமன் துணையுடன் கோபம் தீர தனலட்சுமியை அடித்துக்கொன்றேன்'' என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

குழந்தை இல்லை என்பதற்காக மாமியாரே மருமகளை துள்ளத்துடிக்க அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | Good News: விரைவில் விமானத்திலும் இணைய வசதியை அனுபவிக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News