நயன் - விக்கி வாடகைத்தாய் விவகாரம் : வெளியானது விசாரணை அறிக்கை... பரபரப்பு தகவல்கள்

Nayanthara Vignesh Shivan Surrogacy issue : நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் பெற்ற விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியாகியுள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 26, 2022, 07:01 PM IST
  • 2016ஆம் ஆண்டே இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர்.
  • இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது.
  • தனியார் மருத்துவமனை மீதான குறைப்பாடுகளையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நயன் - விக்கி வாடகைத்தாய் விவகாரம்  : வெளியானது விசாரணை அறிக்கை... பரபரப்பு தகவல்கள் title=

Nayanthara Vignesh Shivan Surrogacy issue : நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.

ஜூன் மாதம்தான் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே இவர்களுக்கு குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பி பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டனர். இதனையடுத்து அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என கூறப்பட்டது. அதேசமயம் நயனும், விக்கியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் விதிகளை மீறினரா எனவும் கேள்வி எழுந்தது.

மேலும் படிக்க | தலை தீபாவளி கொண்டாடும் நயன் விக்னேஷ் தம்பதிகள்! குழந்தைகளுடன் வெளியிட்ட முதல் வீடியோ!

குழு விசாரணை 

நிலைமை இப்படி இருக்க இந்த விவகாரம் தொடர்பாக நயனிடமும், விக்னேஷ் சிவனிடமும் விளக்கம் கேட்கப்படுமென்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்தான் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. எனவே அங்கு பணி செய்யும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்தது. அதன்படி மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.

Nayanthara

இந்த விசாரணை குழுவிடம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி உரிய ஆதாரத்துடன் பதில் அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது. அதில், "இரட்டை குழந்தை விவகாரத்தில் விதி மீறவில்லை" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி நயன்தாரா தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016இல் திருமணம்...

விக்கி - நயன் தம்பதி, 2016ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதியே பதிவு திருமணம் செய்துள்ளதாகவும், அதற்கான சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் உண்மைத்தன்மையையும் பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கி - நயன் தம்பதியினருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது, 2020ஆம் ஆண்டில் அவர்களின் குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட குடும்ப மருத்துவர் வெளிநாடு சென்றுள்ளதாலும், உரிய தொலைப்பேசி எண் கிடைக்காததாலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என சுகாதாரத்துறை குழு தெரிவித்துள்ளது.

மேலும், சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள்  மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

Nayanthara

அந்த அறிக்கையில், "2020, ஆகஸ்ட் மாதத்தில் சினைமுட்டை (Oocytes) மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் (Embroyo) உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 2021, நவம்பர் மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. மார்ச் 2022இல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கப்பட்டுள்ளாதாக தெரிய வருகிறது. 

செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, உறவினர் அல்லாதோர் வாடகை தாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. 

விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் அக்.9ஆம் தேதி அன்று தம்பதிகளிடம் (நயன் - விக்கி) வழங்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரத்தை அக். 9ஆம் தேதி மாலையில் சமூக வலைதளங்களில் அறிவிக்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது. 

குறைபாடுகள் 

இந்த விசாரணையில் தனியார் மருத்துவமனையில் மீதும் சில குறைபாடுகள் இக்குழுவால் கண்டறியப்பட்டது. "ஐசிஎம்ஆர் வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை.

Nayanthara

எனவே, மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற சம்மன் அனுப்பப்பட்டுள்ளது" விசாரணை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | புது ட்விஸ்ட்.. 6 ஆண்டுகளுக்கு முன்னரே நயன் - விக்கி திருமணம்; வாடகை தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News