அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் 2019ம் ஆண்டு இந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக்காக தமிழில் வெளிவந்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனி கபூரின் பே வியூ புரோஜெக்ட்ஸ் - Zee Studios- ROMEOPICTURES ராகுல் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தைப் பாராட்டி உதயநிதி ஸ்டாலினுக்கு எம்.பி ஆ.ராசா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும் படிக்க | Honor Killing: கண்ணகி ஆணவக் கொலை வழக்கு; அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள்
அதில், தாங்கள் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் பார்த்தேன். திகைத்து மகிழ்ந்தேன். இந்த திரைப்படம் வணிக நோக்கில் இலாபமா நட்டமா என்பதைவிட தமிழ் திரையில் இவ்வளவு அப்பட்டமாகவும், பட்டவர்த்தனமாகவும் சாதி பற்றிய புரிதலை - கண்ணோட்டத்தை - எவரும் இதுவரை தந்ததில்லை- என்பதுதான் கொண்டாடப்பட வேண்டிய உண்மை. காவல் உதவி ஆணையாளராக படத்தில் வரும் உங்கள் பாத்திரத்திற்கு முன்னால் நிற்கும் மற்ற காவலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாதியை அடையாளப்படுத்தியும் பெருமைப்படுத்தியும் சிலாகித்து பேசுகின்ற காட்சியில் பெரும் வரலாற்று ஆய்வு பொதிந்து கிடக்கிறது.
திராவிட இயக்கம் முன்னெடுத்த இந்த சாதி ஒழிப்பு இன்று முனை மழுங்கிவிட்டதோ என்று முற்போக்கு சிந்தனையாளர்களே கலக்கம் அடைந்துள்ளபோது, 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் கலக்கம் விலக்கும் ஒளிக்கீற்று!. படத்தில் வரும் காவலர்கள் தாங்கள் யாருக்கு மேல் யார் என்ற சாதி பெருமிதத்தில் கவனமாய் கட்டுப்பாடாய் இருப்பதை காட்சிப்படுத்தியபோது சாதியின் உண்மையான கோரமுகம் மட்டுமல்ல; இன்றும் நீடிக்கும் ஈனமான தத்துவம் என்பதை கச்சிதமாய் காட்சிப்படுத்தியது பாராட்டுக்குரியது. சமூக உண்மையை ஏற்றுக் கொள்ள இன்றும் பலருக்கு தயக்கமிருக்கும். ஆனால், அவர்களின் மனசாட்சிக்கூட மறைமுகமாக தங்களை நகைக்கும் அளவில் படத்தின் காட்சி அமைந்துள்ளது.
சாதி குறித்த வாதப்பிரதிவாதங்களை இப்படத்தில் காட்சிப்படுத்தியது நுட்பமான உத்தி. எல்லோரும் சமமல்ல என்ற சாதிய மனம் தலை தலைமுறையாக கட்டமைக்கப்பட்ட இச்சமூகத்தின் குரலை உங்கள் காவலர் ஒருவர் வெளிப்படுத்துகிறார்: 'எல்லோரும் சமம் என்றால் யார் அரசனாக இருப்பது'?- என்று உங்களிடம் பணிபுரியும் காவலரின் கேள்விக்கு ‘எல்லோரும் சமம் என்று நினைப்பவர்தான் அரசனாக வரவேண்டும்' - என்ற பதில் எவ்வளவு புரட்சிகரமானது: ‘ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல; அது சக மனிதனுக்கு உரிய சமத்துவத்தையும் மதிப்பையும் தருவது' என்றார் அறிஞர் அண்ணா . அந்த வாசகங்களை ஒற்றை வரியில் காட்சிப்படுத்தியதை எண்ணி வியந்து மகிழ்ந்தேன்.
காவல் உதவி ஆணையாளராக உங்களோடு பணியாற்றிய அனைத்து காவல் அலுவலர்களுக்கும் தங்களின் அரசாங்கத்து பதவியைவிட சாதியை பெரிதாக கருதி பெருமிதம் கொள்வதை வெறும் படக்காட்சி என்று ஒதுக்க இயலாது. அந்த வறட்டுப் பெருமிதம் இன்னும் அரசு நிர்வாகத்தில் புரையோடிப்போய் உயிர்ப்போடு இருக்கிறது என்பதுதான் உண்மை.
அடுக்குகளாய் கட்டமைக்கப்பட்ட சாதிய சமூக அமைப்பில் கடைசி அடுக்கில் இருக்கும் துப்புரவுப் பணியாளர்களின் அவலநிலையை காட்சிப்படுத்தியதோடு நில்லாமல், அவர்கள் சந்திக்கும் சவால்களை ‘நெஞ்சுக்கு நீதி' தோலுரித்து காட்டியிருக்கிறது. இந்த சாதிய 'அடுக்கு கட்டமைப்பை' பிராமணியம்தான் எப்போதும் இப்போதும் தலைமை தாங்குகிறது என்பதை படத்தின் கடைசி பாகத்தில் குறியீடாய் காட்டப்பட்டுள்ளது மனங்கொள்ளத்தக்கது.
மதம் வேண்டாம், சாதி வேண்டாம் என்று சொல்ல வந்த திரைப்படங்கள் உண்டு; 'ஒரே ரத்தம்' தொடங்கி ‘ஜெய் பீம்' வரை முயற்சிகள் பல. அவைகள் சாதி இந்த சமூகத்தின் அவமானம் என்று சொல்ல வந்தவை; பாராட்டுக்குரியவை. ஆனால், 'நெஞ்சுக்கு நீதி' இந்திய சாதிய அமைப்பை வரலாற்று உளவியல் பின்புலத்தோடு ஆராய்ந்து, வரையறைப்படுத்தி-அந்த கட்டுமானம் ஏற்படுத்தும் காயங்களையும் காயங்களின் வலிகளையும் முழுவதுமாக காட்சிபடுத்தி தீர்வையும் தந்த ஒரு படம் அல்ல; ஒரே படம். ‘நெஞ்சுக்கு நீதி' வெல்லட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இந்தியாவுக்கு இலங்கை சொல்லும் ‘ரகசியம்’ என்ன ?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR