வேலூர் தொகுதியில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளாதக தகவல்கள் வெளியாகியுள்ளது!
வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு முதல் 30-ஆம் தேதி இரவு வரை துரைமுருகன் வீடு மற்றும் பள்ளி, கல்லூரியில் வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகன் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைக்கப் பட்டிருந்த பணம் சிக்கியது.
பணத்துடன் வாக்களர் பெயர் பட்டியலும் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனால், இத்தொகதியில் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, `வருமான வரித்துறை சோதனை குறித்து அறிக்கை அளித்து விட்டதாகவும், தேர்தல் ரத்து குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்' என்று பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில், வேலூர் ரெய்டு குறித்து வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்துக்கு இன்று காலை அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையில், வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வருமான வரித்துறை வலியுறுத்தவில்லை என்று டெல்லியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், வருமான வரித்துறை அறிக்கையைப் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.