முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டார்...!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாங்கத்தில் அவர்மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் அவரைத் தேடினர். இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், தான் தலைமறைவாகவில்லை எனவும், தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடவும் என தெரிவித்தார்.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் இன்று விடியற்காலை, சாலிகிராமத்தில் உள்ள கருணாஸின் வீட்டில் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான எம்எல்ஏ கருணாஸ் எழும்பூர் 13 ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதை தொடர்ந்து, கருணாஸ் மீதுள்ள கொலை முயற்சி புகாரை (301) ரத்து செய்தார். முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான எம்எல்ஏ கருணாஸ்-க்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!