ரயில்வே பொதுத்துறை போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் மீண்டும் ஈடுபட்டு உள்ளது. இது தமிழகத்தில் மொழிப் போராட்டத்திற்கான களத்தினை அமைத்திடும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இதுதொடர்பாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை (General Departmental Competitive Examination), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை' என்றும், 'ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும்' என்றும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல, ரயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நூறு சதவீதம் 'அப்ஜெக்டிவ்' கேள்விகள் அடங்கிய இந்தத் தேர்வினை மாநில மொழிகளில் நடத்த வேண்டுமா என்று தெற்கு மத்திய ரயில்வே எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், 'இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது' என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.
தபால் துறையில் ஏற்கனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநிலமொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அப்போது மத்திய அரசு, 'தபால் துறை தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும்' என்று உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது, ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
அதேபோல் 'குரூப் சி பதவிகளுக்கான தேர்வுகள்' தொடர்பாக தென் மேற்கு ரயில்வேயின் சார்பில், 'ஆங்கிலத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தவர், இந்தி மொழியில் சில கேள்விகளுக்கு தேர்வு எழுதியிருந்தால் அந்த தேர்வுத்தாளைத் திருத்தலாமா? அப்படி திருத்தலாம் என்றால் எவ்வளவு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்? ஏற்கனவே விருப்பம் தெரிவித்த ஆங்கிலத்தில் எழுதியுள்ள கேள்விகளுக்கு மட்டும் மதிப்பெண்கள் போட வேண்டுமா அல்லது இந்தியில் பதிலளித்துள்ள கேள்விகளுக்கும் சேர்த்து அனைத்து கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் போட வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், 'விருப்பம் தெரிவித்த ஆங்கிலம் தவிர, வேறு மொழியில் கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் அந்த கேள்விகளுக்கு மதிப்பெண் போட வேண்டியதில்லை' என்று பதிலளித்திருக்கிறது.
The instructions given by the Union Government to conduct General Departmental Competitive Examinations for Railway employees in only English and Hindi goes against the premise of language equality.
I urge the Minister to immediately withdraw the instructions.
1/2@PiyushGoyal pic.twitter.com/0lr0XL2pMU— M.K.Stalin (@mkstalin) September 6, 2019
ஆனால் அடுத்த வரியில், 'இந்தியில் எழுத விருப்பம் தெரிவித்து விட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் எழுதியிருந்தால் அதற்கு மதிப்பெண் போட வேண்டும்' என்று கூறியிருப்பது, 'ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு' என்று ரயில்வே வாரியம், வஞ்சக எண்ணத்துடன் செயல்படுவதைக் காட்டுகிறது.
குறிப்பாக, தமிழிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் கிடையாது என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளுக்கு அப்பட்டமாகச் செய்யும் பச்சைத் துரோகம் மட்டுமல்லாமல் பஞ்சமா பாதகம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் பா.ஜ.க. ஆட்சியில் ரயில்வே வாரியம் போன்ற அமைப்புகளும் உரிய முறையில் மதிக்கத் தவறுவது, இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது. ரயில்வே துறையில் இந்தி மொழி கற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி தெரிந்தவர்களை படிப்படியாகக் குறைக்கும் சதித் திட்டமாகவே இதை திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
இந்தியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழ்மொழிக்குத் துரோகம் செய்யும் ரயில்வே வாரியத்தின் இந்த பாரபட்சமான நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆகவே, தபால்துறை தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தும் அதேவேளையில், ரயில்வேயில் நடைபெறும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகள்' (GDCE) அனைத்துமே தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்.
தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.