ரஜினி இதுவரை அரசியலுக்கு வராமல் இருப்பது அவரது ராஜதந்திரம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தென்காசி மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி, "அதிமுக தலைமையிலான கூட்டணி நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அருமையான தம்பதியைக் கொண்டது. திமுக கூட்டணி விவகாரத்து பெற்ற கூட்டணி" என விமர்சித்தார்.
மேலும் அதிமுக அரசு டெண்டரால் எடுக்கப்பட்ட ஆட்சி அல்ல; தொண்டர்களால் எடுக்கப்பட்ட ஆட்சி. இந்தியாவில் 'வாழும் இரும்பு மனிதர் தான் பிரதமர் நரேந்திரமோடி. மீண்டும் அவரது ஆட்சி இந்தியாவிற்கு வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் 'நடிகர் ரஜினி இதுவரை அரசியலுக்கு வராமல் இருப்பது ராஜதந்திரமான முடிவு' என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் 18-ஆம் நாள் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக - தேமுதிக., உள்ளிட்ட கட்சிகள் ஓர் அணியாகவும், திமுக - காங்., கட்சிகள் மற்றொரு அணியாகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தினகரனின் அமமுக, நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில், முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் இல்லாமல் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் இத்தேர்தல் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க கட்சி தலைவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.