YMCA-ல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: தமிழக அரசு

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் செப்டம்பர் 30ம் தேதியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Last Updated : Sep 28, 2018, 04:13 PM IST
YMCA-ல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: தமிழக அரசு title=

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் செப்டம்பர் 30ம் தேதியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிடப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி இதுவரை 31 மாவட்டங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்ற ஒவ்வொரு மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை மக்கள் நலன் கருதி அறிவிக்கப்பட்டன. அதனடிப்படையில், இதுவரை பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்ற 31 மாவட்டங்களில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் ரூபாய் 5,140.18 கோடி மதிப்பில் 2,357 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், ரூபாய் 5,747.24 கோடி மதிப்பில் 3,214 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூபாய் 5,464.79 கோடி மதிப்பில் 8,26,392 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட
உதவிகள் வழங்கியும் சிறப்பித்ததோடு அந்தந்த மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 547 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்கள்.

அதன் தொடர்ச்சியாக, பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன்விழா  சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 30.09.2018 அன்று மாலை 3.30 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவில், பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்தும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட்டும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் திரைத் துறையில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வசனகர்த்தா, உரையாடல் ஆசிரியர்கள், நடனக் கலைஞர்கள், படத் தொகுப்பாளர்கள், சண்டைப் பயிற்சியாளர், ஒப்பனைக் கலைஞர், புகைப்படக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரை கௌரவித்தும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டும், தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவித்து, காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாப் பேருரையாற்றுகிறார்கள்.

மேலும், இவ்விழாவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் அவர்கள் தலைமை வகிக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைவர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகம் பா. வளர்மதி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாண்புமிகு மக்களவை துணைத் தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.

இவ்விழாவையொட்டி, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் மக்களுக்கு ஆற்றிய சமூகத் தொண்டு, சீர்திருத்தங்கள், மக்கள் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சியும் தமிழ்நாடு அரசின் சாதனைகள், திட்டங்கள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் 31 அரசு துறைகள் பங்கேற்கும் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப. அவர்கள் வரவேற்புரை
ஆற்றவுள்ளார்கள். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசுச் செயலாளர் இரா.வெங்கடேசன், இ.ஆ.ப., அவர்கள் நன்றியுரை ஆற்றுவார்கள்.

Trending News