சிபிஎஸ்இ பாடநூலில் வரலாற்று உண்மைகளை மறைத்து, நாடார் சமூகத்தின் மீது அவதூறு சேற்றை வாரி வீசி இருப்பது மன்னிக்கவே முடியாத கொடும் செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் பக்கம் 168-ல், சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் பாடம் இடம் பெற்று இருக்கிறது.
2012 ஆம் ஆண்டு இதுபோன்று நாடார்குல மக்கள் மீது அவதூறு செய்யும் வகையில் சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்று இருந்தது. அதனை நீக்க வேண்டும் என்று 2012 அக்டோபர் 26 இல் நான் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தினேன். மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்தைக் கண்டித்தும், நாடார் மக்கள் மீது நஞ்சைக் கக்கும் பாடத்தை அறவே நீக்க வலியுறுத்தியும் 2012 நவம்பர் 2 ஆம் தேதி நாகர்கோவிலில், தலைமை அஞ்சலகம் எதிரே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.
இந்நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், அதே பாடம் இடம்பெற்று இருக்கிறது.
தமிழகத்தின் வரலாற்றில் நாடார்குல மக்களுக்கு மேன்மையான சிறப்பு இருக்கிறது. பழந்தமிழர் பூமியான நாஞ்சில் நாட்டின் குமரி மாவட்டத்தை கேரளத்தோடு இணைப்பதற்கு வஞ்சக சதி நடந்தபோது, அதை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய வீர வரலாறு மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், தாணுலிங்க நாடார், நத்தானியர், பி.எஸ்.மணி, சிதம்பர நாடார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்ட பெருமக்களுக்கு உண்டு.
நாடார்குல பெருமக்கள் நாஞ்சில் நாட்டின் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். ஆனால், அவர்களை பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று சி.பி.எஸ்.இ., பாடநூல் குறிப்பிடுகிறது. மேலும் பழம்பெருமை வாய்ந்த நாடார் சமூக மக்களை மதிப்புக் குறைவான பெயரைக் குறிப்பிட்டு, இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
நாடார் சமூகத்திற்கும், அக்குலப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளையும், கொடுமைகளையும் எதிர்த்து அய்யா வைகுண்டநாதர் தலைமையில் அறப்போராட்டம் வீறுகொண்டு எழுந்தது. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடநூலில் நாடார் சமூக பெண்கள் மேலாடை அணியும் உரிமை பெறுவதற்காக கிறித்துவ சமயத்தைத் தழுவியதாக சி.பி.எஸ்.இ. பாடநூலில் நஞ்சை கொட்டி இருக்கிறார்கள்.
தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சி.பி.எஸ்.இ. 9 ஆம் வகுப்புப் பாடநூலில் வரலாற்று உண்மைகளை மறைத்து, நாடார் சமூகத்தின் மீது அவதூறு சேற்றை வாரி வீசி இருப்பது மன்னிக்கவே முடியாத கொடும் செயலாகும். மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார்குல மக்களை தவறாகச் சித்தரிக்கும் பாடத்தை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.