பிழையில்லா நல் அமைப்பைத் திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!!
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த திருத்தங்களை, மாநிலங்களவை நிராகரித்ததால், அது நிறைவேற்றப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மத்திய பாஜக அரசு, நடப்பு நாடாளுமன்ற தொடரில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை, நேற்று முன்தினம், மக்களவையில் தாக்கல் செய்து, ஏகமனதாக நிறைவேற்றியது.
இதற்க்கு, பலரும் தங்களின் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வரும் நிலையில், மேகாலயா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது. இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது..... “அரசியலமைப்பு சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தம் கடமை நமக்கு உள்ளது. ஆனால் பிழையில்லா நல் அமைப்பைத் திருத்த முற்படுவது மக்களுக்கும் மக்களாட்சிக்கு செய்யும் துரோகமே. நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்திற்கு நிகரானது என்று மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும். இந்தியாவை ஒரு சாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை காந்தியின் 150ஆவது பிறந்த நாளை அவர் மறைவு நாளாக மாற்றிவிட்டால் அவர் கனவு கண்ட இந்தியா உருத் தெரியாமல் அழிந்துவிடுமா என்ன” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Makkal Needhi Maiam Press Release regarding Citizenship (Amendment) Bill (CAB).#Nammavar#MakkalNeedhiMaiam pic.twitter.com/7YQ4d9Jxsx
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 11, 2019
மேலும், இது குறித்து கமல் கூறுகையில்.... “முயன்று தோற்றவர், முயல்கின்றனர். இது ‘பாமர இந்தியாவல்ல’ உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க. ‘இளம் இந்தியா’ விரைந்து இதுபோன்ற திட்டங்களை நிராகரிக்கும். எங்கள் தாய் நாட்டை தந்தையர் நாடாக மாற்ற முயலும் பிதா மஹாக்களுக்கு இது புரிய வேண்டும்” என்றார். “மய்யத்தின் வாதம் ‘இதில் கொஞ்சம்’ ‘அதில் கொஞ்சம்’ கலந்து பசியாறும் சந்தர்ப்பவாதம் அல்ல. நமக்கு நல்லதே நடக்க வித்திடும் சிந்தனைகளைப் பற்றி தொடரும் பெருங்கூட்டம் நாம். சிந்தனைகளை மய்யம் கொள்ளச் செய்ய சூளுரை ஏற்றவரே எம் மய்யத்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.