உலகம் உள்ளவரை உயிர்ப்புடன் உலாவரும் பாரதியின் கவிதைகள்!

பாட்டுக்கு ஒரு புலவன் எங்கள் பாரதி. மூண்டாசுக் கவிஞனின் மூச்சிலும் ; பேச்சிலும் ; எழுத்திலும் ; குருதியிலும் தமிழ் கலந்திருந்தன. அதனால்தான் பாரதியின் கவிதைகள் இன்றளவும் தானும் வாழ்ந்து தமிழையும் வளர்த்துகொண்டிருக்கின்றன.   

Written by - Amarvannan R | Edited by - RK Spark | Last Updated : Sep 11, 2023, 09:02 AM IST
  • பாட்டுக்கு ஒரு புலவன் எங்கள் பாரதி.
  • இன்று அவருக்கு 102வது நினைவுநாள்.
  • இந்நாளில் அவரது நினைவுகளை மறவாமல் போற்றுவோம்.
உலகம் உள்ளவரை உயிர்ப்புடன் உலாவரும் பாரதியின் கவிதைகள்! title=

ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம்  எனப் பல  மொழிகளில் புலமைப்பெற்று இருந்தாலும், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதான மொழி வேறொன்றும் இல்லை" என  தமிழின் சிறப்பை இவ்வுலகுக்கு பறைசாற்றினார் பாரதி. தமிழகத்தில் திருநெல்வேலி - தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, 1882ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 11ஆம் நாள்  எட்டயபுரத்தில் பிறந்தார், பாரதி. இவரது தந்தை சின்னசாமி. தாயார் இலக்குமி. பாரதியின்  இயற்பெயர் சுப்பையா. சி. சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டார்.  மகாகவி, முண்டாசுக் கவிஞன், சக்திதாசன், ,பாரதியார் ஆகியன அவரது புனைப் பெயராகும். துணைவியார் செல்லம்மாள். மகள்கள் தங்கம்மாள், சகுந்தலா. கவிஞர் - எழுத்தாளர் - இதழாளர் - கட்டுரையாளர் - சிறுகதை ஆசிரியர் -  சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்டவர். கேலிச்சித்திரம் - ,கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர். 'இந்தியா', 'சுதேசமித்திரன்' இதழில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

மேலும் படிக்க | “தமிழகத்தில் அவர்களால் வெல்லவே முடியாது..” பாஜக-வை சூசகமாக குட்டும் உதயநிதி..!

பாரதி எழுதிய 'குயில்பாட்டு', 'கண்ணன் பாட்டு', 'பாப்பா பாட்டு', 'பாஞ்சாலி சபதம்', 'புதிய ஆத்திச்சூடி' போன்றவற்றில் சமுதாய ஏற்றத்தாழ்வையும் பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்து எழுதினார். அவர் தம் எழுத்துக்கள் மூலம் இந்திய மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டினார். 'பாரத சமுதாயம் வாழ்கவே : வாழ்க வாழ்க' என்றும் ; 'எல்லோரும் ஓர் குலம் ; எல்லோரும் ஓர் இனம் ; எல்லோரும் இந்திய மக்கள் : எல்லோரும் ஒரு நிறை ; எல்லோரும் இந்நாட்டு மன்னர் - நாம் ;எல்லோரும் இந்நாட்டு மன்னர் - ஆம் ; எல்லோரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க' என விடுதலைப் போராட்டத்தின்போது இந்திய மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தார்.  இனியொரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம் ; தனியொருவனுக்கு உணவில்லையெனில உலகையே (ஜகத்தினை) அழித்திடுவோம்" என்றார் மகாகவிபாரதி.

தாய்நாட்டுக்காக குரல்கொடுத்த பாரதி, "

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே" என்று தந்தையருக்கும் புகழ் சூட்டினார். 'தாய் நாடு' - 'தந்தையர் நாடு' என  ஆண்  - பெண் சமத்துவத்தை அந்த நாளிலேயே வலியுறுத்தினார் பாரதி.
பிறந்தது எட்டயபுரமாக இருந்தாலும் சிலகாலம் பாண்டிச்சேரியிலும் அதன்பின் சென்னை திருவல்லிக்கேணியிலும் வசித்து வந்தார். அவர் வாழ்ந்த இல்லம் நினைவகமாக மாற்றப்பட்டு உள்ளது.

பாரதியின் கவிதை சாகாவரம் பெற்றவை என்பதற்கு சற்று பின்னோக்கிச் செல்வோம். பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் பாரதியார், 1904 ஆம் ஆண்டு மதுரையில் இருந்து சென்னை வந்தார்.  அக்காலகட்டத்தில் பாரதியாரின் கவிதைகளும் கட்டுரைகளும் செயல்களும் அவரை ஆங்கில அரசின் விரோதி ஆக்கின! அடிமை நாட்டின் ராஜதுரோகியாக கருதப்பட்ட பாரதியை கைதுசெய்வதற்கு வாரண்ட் தயாரானது!  கைதுக்குத் தப்பிய பாரதியார் பிரிட்டனின் ஆட்சிக்குட்பட்ட தமிழகத்தில் இருந்து பிரான்ஸின் ஆட்சி நடந்த பாண்டிச்சேரிக்கு 1908இல் புலம்பெயர்ந்தார்!  பாரதியார் குடும்பத்தோடு பாண்டியில் வாழ்ந்தபோது, சென்னையில் ஒரு சங்கம், கவிதைப் போட்டி ஒன்றை நடத்தியது!

தாய்நாட்டுப் பற்றினை வெளிக்கொணரும் விதமாக கவிதை எழுதப் படவேண்டும் என்றும் முதல் பரிசு 300 ரூபாய் என்றும்;  இரண்டாம் பரிசு 200 ருபாய் என்றும் ;  மூன்றாம் பரிசு 100 ரூபாய் என்றும் அறிவித்திருந்தார்கள்!அது ஒரு கிராம் தங்கம் நான்கு ரூபாய்க்கு விற்ற காலமது!  பாரதியார் குடும்பம் கைக்கும் எட்டாமல் வாய்க்கும் போதாமல் வறுமையில் வாழ்வைக் நகர்த்திக் கொண்டிருந்தகாலம்.  இந்நிலையில் கவிதைப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு சுற்றமும் நட்பும் பாரதியிடம் வேண்டுகோள் வைத்தன! பாரதியும் அதனை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்!

"செந்தமிழ் நாடெனும் போதினிலே ;

இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே ; 

எங்கள் தந்தையர் நாடெனும் பேச்சினிலே ;ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே! " என்ற பாடலை எழுதி போட்டிக்கு அனுப்பினார். பாரதி பாடலுக்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்தது!  "முதல் பரிசுபெற்ற பாடலோ இரண்டாம் பரிசுபெற்ற பாடலோ பாரதி எழுதிய பாடலில் உள்ள ஒரு அடிக்கு இணையாகாது என்பதே மறுக்கமுடியாத உண்மை. அதுமட்டுமின்றி ; பாரதியின் பாடலிலுள்ள இனிமையும் நயமும் சந்தமும் பொருளும் முதலிரண்டு பாடல்களில் இல்லவே இல்லை. இதுதான் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு!" என்று பாரதியின் நண்பர் வவேசு மிகவும் வருத்தப்பட்டார் ; வேதனைப்பட்டார்!

அது மட்டுமின்றி ; யாருக்கோ கொடுக்க வேண்டுமென்று முன்பே முடிவு செய்திருப்பார்கள்,. இதற்காக நீர் வருத்தப்படாதீர். நம் கொடுப்பனை இவ்வளவே!" என்றாராம் வவேசு.. அந்த போட்டியில் முதலிரண்டாம் பரிசுகளைப் பெற்ற கவிதைகள் அன்றைக்கே காணாமல் போய்விட்டன. ஆனால், பாரதியின் கவிதைகள் அனைத்தும் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கின்றன. அதனால்தான், பாரதியின் கவிதை இன்றளவும் தானும் வாழ்ந்து தமிழையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது! ஆகமொத்தத்தில், பாரதியின் கவிதை இறவா வரம்பெற்றது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.  இன்று செப்டம்பர் 11, பாரதியின் 102வது நினைவுநாள். அவர் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் ; உலகம் உள்ளவரை அவரது கவிதைகள் மட்டும் உயிர்ப்புடன் உலா வந்துகொண்டிருக்கின்றன என்பதே முற்றிலும் உண்மையாகும். 

எழுத்தாக்கம் :
இரா. அமர்வண்ணன்

மேலும் படிக்க | G20 Dinner: இரவு விருந்தில் பங்கேற்க டெல்லி வந்தடைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News