பிரியா மரண வழக்கு: மருத்துவர்களின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்த வழக்கில், முன் ஜாமீன் கோரி இரு மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 18, 2022, 05:05 PM IST
  • இரு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல் துறைக்கு உத்தரவு.
  • தொடர்ந்து, மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கிய மருத்துவர்கள் தரப்பு வழக்கறிஞர்.
  • மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரியா மரண வழக்கு: மருத்துவர்களின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவு! title=

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா, கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின்னும் குணமடையாததால், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 15ம் தேதி மரணமடைந்தார்.

பெரியார்நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், மாணவி பிரியா மரணமடைந்த வழக்கில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இரு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் தற்போது தான் நடந்துள்ளது. காவல் துறையினர் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | பிரியாவின் பெயரில் கால்பந்தாட்ட போட்டி - அண்ணாமலை உறுதி

தொடர்ந்து, மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கிய மருத்துவர்கள் தரப்பு வழக்கறிஞர், அன்றைய தினம் மேலும் இரு அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டதாகவும், அவர்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.தற்போது விசாரணை என்ற பெயரில் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து துன்புறுத்துவதாகவும், சரணடைய தயாராக இருப்பதாகவும், சம்பவம் அரசியலாக்கப்பட்டு, அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருப்பதால் காவல் நிலையத்துக்கு செல்வதே ஆபத்தாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சம்பவம் குறித்து விசாரித்த மருத்துவர் குழு அளித்த அறிக்கையில், மனுதாரர்கள் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி, அறிக்கையை தாக்கல் செய்தார்.

விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், மனுதாரர்கள் கவன குறைவாக செயல்பட்டார்களா? இல்லையா? என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் எனவும் தெரிவித்த குற்றவியல் தலைமை வழக்கறிஞர், இருவாரங்களில் விரிவான பதில்மனுவை தாக்கல் செய்வதாக தெரிவித்தார். 

அதுவரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, சரணடைந்தால் காவல் துறையினர் கவனித்துக் கொள்வர் எனத் தெரிவித்தார். பின்னர் மருத்துவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது என்றும் இரு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

மேலும் படிக்க | மாணவியின் குடும்பத்திற்கு முதல்வர் நேரில் ஆறுதல்! பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என ட்வீட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News