8 வழிச்சாலை திட்டத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது...!
8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழித்தடத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நில ஆர்ஜித நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் திட்டத்தை இறுதி செய்யும் வரை நில ஆர்ஜித நடவடிக்கைகள் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.
மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சட்டவிரோதமாக மரங்கள் வெட்டியதாக 5 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, தற்போது சென்னை உயர்நீதிமன்றம் எட்டு 8 வழிச்சாலை திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகபடுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.