அதிமுக ஆட்சியின் ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் 22 சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் இன்று வெளியாகிறது!!
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எட்டு மணியளவில் எண்ணப்படுகின்றன. இதுவரை இல்லாத வகையில், VVPAT எனப்படும் ஒப்புகை சீட்டுகளும் எண்ணப்பட்டு, பதிவான வாக்குகளுடன் ஒப்பிடப்பட்ட பின்பே, முடிவுகள் வெளியாகும் என்பதால், வழக்கத்தை விட இம்முறை, தேர்தல் முடிவுகள் வெளியாக, காலதாமதம் ஆகும்.
இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகளில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியும், தேசிய அளவில், பாஜக தலைமையிலான கூட்டணியும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பு முடிவுகளால், தமிழக அரசியல் தலைவர்கள் பெரும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர். மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், மத்தியில் தங்களுக்கு எதிரான கூட்டணி வெற்றி பெற்றால், அதிக எம்பி.,க்களை வைத்திருந்தும் எந்த பலனும் இல்லாமல் போய்விடுமோ என, திமுக தலைமை கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜகவோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ வெற்றி பெறாமல் போனால், அது பற்றி, பாஜகவின் மத்திய தலைமை பெரிய அளவில் கவலைப்படப்போவதில்லை என்றே தெரிகிறது. ஏனென்றால், அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள், பிற மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் கிடைத்துவிடும் என நம்புவதே காரணம். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, இடைத்தேர்தல் முடிவுகள் வருமா என்பது சந்தேகமே. அப்படியே வந்தாலும், ஆட்சி மாற்றம் நிகழாமல் பார்த்துக் கொள்ள தேவையான அரசியல் நடவடிக்கைகளை, அதிமுக தலைமை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.