கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். மீன்பிடி தொழிலாளியான இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருந்தனர். ஆன்றோ சகாயராஜ் மற்றும் மூத்த மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர். இளைய மகன் ஆரோன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் மனைவி பவுலின்மேரி அவரது தாயார் திரேசம்மாளுடன் முட்டம் பகுதியில் ஆள் அரவமற்ற பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே அமைந்துள்ள பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு தாய் திரேசம்மாள் மற்றும் மகள் பவுலின் மேரி குடும்பத்தினரிடம் செல்போனில் பேசி விட்டு தூங்க சென்றதாக தெரிகிறது. மறுநாள் காலை அவர்கள் மீண்டும் பவுலின் மேரியை செல்போனில் தொடர்பு கொண்ட போது அழைப்பை யாரும் எடுக்கவில்லை. இதனால் பயந்துபோன உறவினர்கள் அவரது வீட்டிற்கே புறப்பட்டு சென்றனர். அப்போது வீட்டின் கதவுகள் பூட்டி கிடந்தது. சந்தேகமடைந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். தாயும் மகளும் வீட்டின் நடு தளத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்திருக்கிறார்கள்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்தவர்களின் உடலை சோதனையிட்டதில் அது கொலை என உறுதி செய்யப்பட்டது. பின்னர், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்தை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தவர் அதிகாரிகள் வீட்டில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என சோதனையிட்டனர். தடயவியல் வல்லுநர்களும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் கிடைத்த கை ரேகைகளையும் சேகரித்துக் கொண்டனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமெடுத்தது.
முதற்கட்ட விசாரணையில் பங்களா வீட்டிற்கு வந்த மர்ம நபர் யாரோ ஒருவர், வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மின்சார மீட்டரை உடைத்து, மின்சாரத்தை துண்டித்து பின்னர் வீட்டின் முன்பக்கம் வழியாக புகுந்ததாக யூகித்திருக்கிறார்கள். பின்னர், வீட்டிலிருந்த அயர்ன் பாக்ஸ் ஒயரால் தாய் மற்றும் மகளை கழுத்தை இறுக்கி, சுத்தியலால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், சம்பவத்தின் போது பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11-சவரன் தாலி சங்கிலி, தாய் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 5-சவரன் தங்க சங்கிலி என மொத்தம் 16-சவரன் தங்க நகைகளை அறுத்துக்கொண்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.
கொள்ளையடிக்க திட்டம் போட்டு தாயும் மகளையும் கொலை செய்தார்களா? இல்லை அப்பகுதியில் முகாமிட்ட கஞ்சா கும்பல் முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே, வீட்டிலிருந்த 70-சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருடப்படாமல் அப்படியே பத்திரமாக இருந்தது. நகைக்காக அரங்கேறிய சம்பவம் போல இல்லை என்று முடிவெடுத்த போலீசாருக்கு இது இன்னும் சந்தேகத்தை தூண்டியது. மர்ம நபரை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து நெல்லை சரக டிஜஜி பிரவேஷ்குமார் மற்றும் எஸ்பி ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் உத்தரவிட்டனர்.
அயர்ன் பாக்ஸ் மற்றும் கைரேகையை பதிவுகளை முக்கிய தடயமாக வைத்து விசாரணையை முன்னெடுத்த நிலையில் அப்போதுதான் மேலும் ஒரு முக்கிய தடயம் சிக்கியது. வீட்டு தோட்டத்தில் இருந்து மங்கி குல்லா ஒன்று கைப்பற்றப்பட்டது. அதன் வீடியோவை டிஎஸ்பி தங்கராமன் வெளியிட்டு பொதுமக்களின் உதவியையும் நாடினார்.
15 நாட்களாக கஞ்சா கும்பலை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து எந்த தடயமோ ஆதாரமோ சிக்காத நிலையில் கொலையாளிகள் யார்? என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்து வந்தது. இதனையடுத்து 15-நாட்களுக்கு பின் மங்கி குல்லா அணிவதை வாடிக்கையாக கொண்ட கடியப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த அமலசுமன் என்பவர் போலீசில் பிடியில் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார். பின்னர், ஆதாரத்துடன் விசாரணை கழுத்தை இறுக்க தாய் மகள் இருவரையும் கொலை செய்ததாக அமல சுமன்ஒப்பு கொண்டார். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை போலீசார் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
36 வயதான அமலசுமனுக்கு திருமணம் ஆகி சில மாதங்களிலேயே மனைவியை பிரிந்த நிலையில் முட்டம் பகுதியைச் சேர்ந்த கள்ள காதலியுடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் அமலசுமன், பெண்களை மிரட்டி அவர்களுடன் உல்லாசமாக இருப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். கொலை செய்யப்பட்ட பவுலின் மேரி வீட்டில் நடத்தி வரும் தையல் பயிற்சி வகுப்பிற்கு வரும் இளம்பெண் ஒருவரை அதே நோக்கத்தோடு பாலோ செய்திருக்கிறார். அங்குதான் பிரச்சினை உருவெடுத்தது. ஆசை வார்த்தைகள் கூறி துரத்தி துரத்தி தொந்தரவு கொடுக்க, ஆத்திரமடைந்த பெண் அமலசுமனிடம் கோபத்தை காட்டியிருக்கிறார். கூடவே பவுலின் மேரியிடம் நடந்ததை கூறி அப்பெண் அழுதிருக்கிறார்.
இதனால் கோபமடைந்த பவுலின், அமலசுமனை எச்சரித்திருக்கிறார். இதனால் பவுலின் மீது ஆத்திரமடைந்தவர், கடந்த 6ம் தேதி மது போதையில் பவுலின் வீட்டிற்கு சென்றிக்கிறார். காலிங் பெல்லை அடித்த போது பவுலின் வெளியே வராததால் மின் மீட்டரை அடித்து நொறுக்கியவர் பின்னர், அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார். ஆனால் ஆத்திரம் அவரை அடியெடுத்து வைக்கவிடாமல் திரும்பவும் பவுலின் வீட்டிற்கே அழைத்து சென்றது. அப்போது பவுலின் வீட்டில் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, மீண்டும் மீண்டும் காலிங் பெல்லை அடித்திருக்கிறார். திடீரென்று கதவுகள் திறக்கப்பட்டு யார் என்ற சத்தம் பவுலின் மேரியிடம் இருந்து வந்தது. போதை வெறியிலிருந்த அமலசுமன் உடனே வீட்டிற்குள் நுழைந்தார். விடாப்பிடியாய் பெண்ணிடம் அரக்க குணத்தை காட்டியவர், கொலைகாரனாக மாறியிருக்கிறார்.
வீட்டிலிருந்த அயர்ன் பாக்ஸ் ஒயரால் கழுத்தை இறுக்கி பின்னர் அங்கிருந்த சுத்தியலால் பவுலின் மேரியின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்திருக்கிறார். அப்போது அதை தடுக்க வந்த அவரது தாயார் திரேசம்மாளையும் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்திருக்கிறார். பின்னர், கொலையை திசை திருப்ப பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11-சவரன் தாலி சங்கிலி, கம்மல் மற்றும் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 3-சவரன் தங்க சங்கிலியையும் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலை எடுத்து கொண்டு வீட்டின் முன்பக்க கதவை சாவியால் பூட்டி தப்பியோடினார், அப்போதுதான் அமலசுமன் தான் அணிந்திருந்த மங்கி குல்லா தொப்பியை தவற விட்டிருக்கிறார். அதுதான் முக்கிய தடயமாக போலீசாரின் கையில் சிக்கியது.
வழக்குப்பதிவு செய்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு நடுவே பறித்த தாலி சங்கிலியை மணவாளக்குறிச்சி முத்தூட் மினி பைனாஸில் அடகு வைக்கு சூரப்பள்ளத்தில் உள்ள கள்ள காதலியுடன் சொகுசாக ஊர் சுற்றி வந்திருக்கிறார். போலீசார் கஞ்சா கும்பலை சேர்ந்தவர்களை விசாரிக்க தொடங்கியவுடன் அடிக்கடி கொலை செய்த வீட்டருகே வந்து ஒன்றும் தெரியாதது போல் தினம் நடக்கும் விசாரணை தகவல்களை கேட்டறிந்து சென்றிருக்கிறார்.
ஒருகட்டத்தில் தன்னை போலீசார் நெருங்குவதை சுதாரித்திருக்கிறார். ஆனால் தப்பிக்க முடியாமல் போனது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அமலசுமனிடம் இருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அமலசுமனை சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | ‘சுப்ரமணியபுரம்’ பட பாணியில் அரங்கேறிய கொலை !
இளம் பெண்ணை பின் தொடர்ந்ததை கண்டித்ததால் ஆத்திரத்தில் அயர்ன் பாக்ஸ் ஒயரால் கழுத்தை இறுக்கியும் தலையில் சுத்தியலால் அடித்து தாய் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியின் வாக்குமூலம் ஊரே கதி கலங்க வைத்துள்ளது.
மேலும் படிக்க | காதலனுக்காக இந்தியா வந்த பிலிப்பைன்ஸ் பெண் பலி - விபத்தா ? சதியா ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR