பொதுவாக புலிகள் தனித்து வாழ்பவை. குறிப்பிட்ட சில நிலபரப்பை தனதாக்கிக் கொண்டு, அதில் தனியாக வேட்டையாடி வாழும். அந்த நிலப்பரப்புக்குள் பிற புலிகளை ஒரு புலி அனுமதிக்காது. என் ஏரியா உள்ளே வராதே மனோபாவம்தான். ஏதோ ஒரு இடத்தில் அது மனிதர்களைத் தாக்கக் கூடிய தன்மையை அடைகிறது. மனிதர்களைக் கொன்று குவிக்கும் புலிகளை நாம் ‘ஆட்கொல்லி’ புலி என அழைத்து வருகிறோம். இயற்கையாகவே புலிகள் மனிதனைத் தாக்க கூடிய விலங்கு அல்ல என்கின்றனர் விலங்கியல் ஆய்வாளர்கள். விலங்குகளை வேட்டையாடி உண்ணும் புலி பொதுவாகவே மனிதர்களைக் கண்டால் விலகி ஓடும் கூச்ச சுபாவத்தைக் கொண்டதாம்.
மனிதர்களைப் பார்க்கும் எல்லா நேரமும் புலி மனிதர்களைத் தாக்குவதில்லை. அதற்கான அச்சுறுத்தல் அல்லது தற்காப்பிற்காக மட்டுமே தாக்க முற்படும் என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். ருசி கண்ட பூனை சும்மா விடுமா என்பது போலத்தான் புலிகளுக்கும். ஒரு முறை மனித ரத்தத்தை ஒரு புலி சுவைத்துப் பழகிவிட்டால் அதன்பிறகு ‘மேன் ஈட்டர்’ என்று அழைக்கப்படும் ஆட்கொல்லிப் புலியாக அது மாறுவிடுகிறது. வயது மூப்பு அல்லது வேட்டையாடத் திறன் இல்லாத புலிகள் கூட மனிதர்களைத் தாக்கும் பண்புக்கு மாறிவிடுவதாகவும் ஆய்வாளர்கள் ஒரு கூற்றை முன்வைக்கிறார்கள். இப்படி ஆட்கொல்லியாக மாறும் புலிகள், அந்தந்த நேரத்து பரபரப்பு செய்திகளுக்குள் வந்து மீண்டும் காணாமல் போகும்.
நீலகிரியை அதிரவைத்த T23
காடுகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான சண்டை 21ம் நூற்றாண்டில் அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவு இருதரப்பிலும் உயிரிழப்புகள் உயர்ந்தவண்ணம் உள்ளன. தமிழகத்தில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஆட்கொல்லி புலியாக அடையாளம் காணப்பட்ட 3 புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றன. ஆட்கொல்லிப் புலிகளை கொன்றுதான் பிடிக்க வேண்டும் ; வேறுவழியில்லை என்று ஒரு காலம் இருந்தது. ஆனால், கடைசியாக நீலகிரியையே அதிர வைத்த T23 புலியை உயிருடன் பிடித்து வனத்துறையினர் அசத்தினர். அதற்காக 22 நாட்கள் இரவும், பகலுமாக அவர்கள் கடினமான உழைப்பில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | தாயை பயமுறுத்தும் வெள்ளை புலிக்குட்டியின் குறும்பு! வைரலாகும் வீடியோ!
மசினகுடியில் உள்ள 4 மனிதர்களையும், அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் T23 புலி கொன்றுள்ளது. இதில் மிக முக்கியமான விவகாரம் என்னவென்றால் 4 மனிதர்களில் முதலில் கொல்லப்பட்ட 3 மனிதர்களையும் T23 புலி சாப்பிடவில்லை. நான்காவதாக கொல்லப்பட்ட மனிதரை மட்டும் உணவாக உட்கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், T23 புலியைப் பிடிக்க தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில வனத்துறையினரும் களத்தில் இறங்கினர். கிட்டத்தட்ட தமிழக செய்திசேனல்களின் பரபரப்புகளில் இடம்பிடிக்கும் அளவுக்கு T23 புலி புகழ் அடைந்தது. கிட்டத்தட்ட 23 நாட்களுக்கும் மேலாக நான்கிற்கும் மேற்பட்ட வனக் கால்நடை மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், 3 மோப்ப நாய்கள் மற்றும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் T23 புலி, மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டது.
புலியைப் பிடிப்பதற்கான செலவு!
கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி மசினகுடி பகுதியில் பிடிக்கப்பட்ட T23 புலி, தற்போது மைசூர் வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த டி23 புலியைப் பிடிப்பதற்கான செலவினங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை T23 புலியை பிடிக்க சுமார் 11 லட்சத்து 34 ஆயிரத்து 105 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வனத்துறை பதில் அளித்துள்ளது. புலியை பிடிக்க இரும்பு குண்டு வைத்தல், வாகன வாடகை, மருந்துகள், உபகரணங்கள் வாங்கியது தொடர்பான செலவுகள் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், உதகை, கூடலூர், மசினகுடி வன ஊழியர்கள், மருத்துவ குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஆகியோர்களுக்கான உணவு, தண்ணீர் மற்றும் தேநீர் உள்ளிட்ட செலவுகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 22 நாட்களில் 11 லட்சத்து 34 ஆயிரத்து 105 ரூபாய் புலியைப் பிடிப்பதற்காக வனத்துறை செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR