இந்தியா நூறாவது ஆண்டு விடுதலை நாளைக் கொண்டாடும் போது இந்தியா உடைந்து சிதறி விடும். எனவே பா.ஜ.க அரசு புரிதலுடன் செயல்பட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். இதுக்குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியதாவது,
இமாச்சலப்பிரதேச மாநில சிம்லாவில் நேற்று (நவம்பர் 17) சட்டப்பேரவைத் தலைவர்களின் 82 ஆவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார். பிரதமர் தனது உரையில், சட்டமன்றங்களின் மாண்புகளை காப்பாற்றும் கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கிறது என்பதையும், நமது நாடு முற்றிலும் பன்முகத்தன்மை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே உரையில் "வளங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரே நாடு - ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை" என்ற கருத்தை தாம் முன்வைப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
பிரதமர் மோடி அவர்களின் இந்த கருத்து, ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா கட்சியின் ஓரே நாடு! ஒரே மதம்! ஒரே மொழி! ஒரே பண்பாடு! எனும் கோட்பாட்டின் நீட்சியாகவே இருக்கிறது.
ஏனெனில் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிப்பதற்கு, 1953 ஆம் ஆண்டு டிசம்பரில், பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பசல் அலி தலைமையில் மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை அமைத்தார்.
இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப் பட வேண்டும் என்று பசல் அலி ஆணையம் 1955, செப்டம்பரில் தனது பரிந்துரை அறிக்கையை அளித்தது.
அப்போது ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர், இந்தியா என்பது ஒரே நாடு; இதனை நிர்வாக வசதிக்காக நாட்டை நூறு பகுதிகளாக பிரிக்க வேண்டும்? டெல்லியில் மையப்படுத்த ஓரே அரசுதான் இருக்க வேண்டும் என்று மொழிவாரி மாநிலப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தார்.
ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை நிறைவேற்றி வரும் பா.ஜ.க அரசு,"ஒரே நாடு ஒரே நாடாளுமன்றம்" என்ற திட்டத்தை செயற்படுத்த முனைந்து இருக்கிறதோ என்ற ஐயப்பாட்டை பிரதமரின் உரை ஏற்படுத்துகிறது.
அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் முக்கியமான காலகட்டம் என்று பிரதமர் குறிப்பிட்டு இருப்பது உண்மைதான். நாட்டின் பன்முகத்தன்மை தகர்க்கப்பட்டு பல்வேறு தேசிய இனங்களின் தனித்துவ அடையாளங்கள் சிதைக்கப்பட்டால் 2047 ஆகஸ்ட்-15 இல் இந்தியா நூறாவது ஆண்டு விடுதலை நாளைக் கொண்டாடும் போது இந்தியா உடைந்து சிதறி விடும். அதற்கு வழிவகுத்து விடாமல் இந்தியாவின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும் மாநிலங்களின் உரிமைகளை பேணவும் பா.ஜ.க அரசு புரிதலுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு தனது அறிக்கையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR