Udhayanidhi Stalin Sanatan Issue: தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தமிழக விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை வருகை தந்தார். அவருக்கு திமுக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,"சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை. நான் பேசியதில் தவறு இல்லாத போது அமைச்சர் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்" என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார்.
பெண்கள் அடிமையாக இருந்தார்கள்
மேலும் தொடர்ந்து பேசிய அவர்,"சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டிருந்தார்கள். கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. திராவிட மாடலில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை உணவு திட்டம், பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளது.
அனைத்து மதங்கள் குறித்தும் பேசினேன். இந்து மதம் குறித்து மட்டும் பேசவில்லை. பெண்களை அடிமைபடுத்தி கொண்டிருந்தார்கள், படிக்க அனுப்பவில்லை. என்னை அதுபற்றி பேசக் கூடாது என்றால் நான் திரும்ப திரும்பப் பேசுவேன். நான் பேசினால் பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படும் என பேசும்போதே கூறினேன்" என்றார்.
மேலும் படிக்க | 'சேகர்பாபு அமைச்சர் பதவியில் விலக வேண்டும்' - கெடு விதித்த அண்ணாமலை
உதயநிதிக்கு எதிர்ப்பும் ஆதரவும்
சென்னையில் தமுஎகச ஏற்பாடு செய்திருந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்று எதிர்க்கப்பட வேண்டியது இல்லை, ஒழிக்கப்பட வேண்டியது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக மற்றும் வலதுசாரி அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லி, பீகார் போன்ற வட மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டு சில இடங்களில் வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சனாதனம் தொடர்பான கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு டெல்லி பாஜக தலைமை எதிர்ப்பு கடிதம் அனுப்பியுள்ளது. குறிப்பாக, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பலரும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசியது பரபரப்பை உண்டாக்கியது. காங்கிரஸ் தரப்பில் உதயநிதிக்கு ஆதரவளிக்கப்பட்டாலும், கே.சி. வேணுகோபால், காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த கரண் சிங் ஆகியோர் உதயநிதிக்கு எதிர்கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பப்பு
மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,"தென்னிந்தியாவின் பப்புவாக உதயநிதி உள்ளார். மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி பேசியது போல் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து பேசினால் இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கி தொடர்ந்து சரியும். தற்போது ஐந்து சதவீதம் வரை இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து இதுபோல உதயநிதி பேசினால், இந்தியா கூட்டணியின் வாக்குகள் 20 சதவீதம் வரை குறையும். ஒரு கருத்தை பேசிவிட்டு எதிர்ப்பு வந்த உடன் தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்து வருகிறார். உதயநிதி பேசுவதை காங்கிரஸ் கட்சியினரே எதிர்க்கிறார்கள்" என கூறியிருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ