கொரோனா தொற்று உலகை ஆட்கொண்டுள்ள நிலையில், உலகம் முழுதும் வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்சனையாக உள்ளது. வருமானம் இல்லாத காரணத்தால் பல நிறுவனங்கள் மூடிவிட்டன. தொழில்கள் முடங்கிவிட்டன. பல நிறுவனங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசு (Tamil Nadu Government) மூலம் தொடங்கப்பட்ட ஒரு வேலைவாய்ப்புத் தளம் (Job Portal), மாநிலம் முழுவதும் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்னர், தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரியப்படுத்த, இந்த வலைதளம் துவக்கப்பட்டது. இதுவரை, இந்த தளம், பல்வேறு துறைகளில் 6000 வேலை வாய்ப்புகளைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைச் (MSME) சார்ந்த அதிக அளவிலான வேலை வாய்ப்புத் தகவல்கள் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. இது தவிர அஷோக் லேய்லாண்ட் போன்ற பெரிய நிறுவனங்களும் தங்கள் வேலை வாய்ப்புத் தகவல்களை இதில் குறிப்பிட்டுள்ளன.
ALSO READ: ஒப்பந்த அடிப்படையில் வங்கிகளில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31...
இந்த தளத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கும் சுமார் 440 நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. முழு நேர, பகுதி நேர, பயிற்சி அடிப்படையிலான, அப்ரெண்டிஸ் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க, வேலை தேடும் சுமார் 25,000 பேர் இத்தளத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர்.
வாகன உற்பத்தி, விவசாயம், உணவு பதப்படுத்தல், மின்னணு, ஹார்ட்வேர், ஐ.டி ஆகிய பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் இந்தத் தளத்தில் உள்ளன. மாத ஊதியம் 4000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை உள்ளது. இந்த பணி இடங்கள் அனேகமாக ஓசூர் மற்றும் கோவையில் உள்ளன. சென்னை மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலும் வேலை வாய்ப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.