ரிமோட் எடுக்க வேண்டியது, போஸ் கொடுக்க வேண்டியது... ரிப்பீட்டு! பங்கமாக கலாய்க்கும் ஜெயக்குமார்

முதல்வர் ஸ்டாலினுக்கு சட்ட ஒழுங்கு குறித்தெல்லாம் கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2022, 05:15 PM IST
  • முதல்வர் ஸ்டாலினுக்கு இது குறித்தெல்லாம் கவலை இல்லை.
  • தினமும் எங்காவது செல்ல வேண்டியது ரிமோட் எடுக்க வேண்டியது, திறக்க வேண்டியது, போஸ் கொடுக்க வேண்டியது, ரிப்பீட்டு
ரிமோட் எடுக்க வேண்டியது, போஸ் கொடுக்க வேண்டியது... ரிப்பீட்டு! பங்கமாக கலாய்க்கும் ஜெயக்குமார் title=

நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

"தமிழகத்தில் நகை கொள்ளை வாகன திருட்டு, செயின் பறிப்பு, கொலை கொள்ளை, ஆள்கடத்தல், கூட்டு பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சட்ட ஒழுங்கு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் சகஜ வாழ்க்கை சீர்கெட்டு விட்டது" என குற்றம் சாட்டினார்.

மேலும், "மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக்காலத்தில் காவல்துறையினர் சுதந்திரமாக கடமையை செயலாற்றும் நிலை இருந்தது.

அதன் அடிப்படையில் சட்ட ஒழுங்கு பராமரிக்கப்பட்டு மக்கள் நிம்மதியான அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால் இன்று ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் கவுன்சிலர்களின் அட்டகாசங்கள் எல்லை மீறி விட்டது. இன்று யாரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை" என விமர்சித்தார்.

மேலும், "அந்தவகையில் காவல்துறை இன்று பரிதாப நிலையில் இருக்கிறது.  காவல்துறையில் உள்ள ஒருசில கருப்பு ஆடுகளை களை எடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும், ஆனால் இந்த அரசால் அது முடியாது". என்றார்.

பின்னர், "முதலமைச்சர் கட்டுப்பாட்டில் தமிழ்நாடும் காவல் துறையும் இல்லை அதனால், சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது.  அதிமுகவினரை பழிவாங்க வேண்டும், வழக்கு போட வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும், என தான் முதலமைச்சரின் எண்ணம் இருக்கிறது" என விமர்சித்தார்.

"காவல்துறையினர் மீது கல்லெறிந்த சமூக விரோதியை பிடித்து கொடுத்த என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது ஆனால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இப்படி இருந்தால் திமுகவினர், திமுக கவுன்சிலர்கள் எப்படி பயப்படுவார்கள்?" என கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து "சட்ட ஒழுங்கு சீரழிவு குறித்து முதலமைச்சர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் திமுகவினருக்கு குளிர்விட்டு விட்டதாகவும், மக்களுக்கு அவர்கள் துன்பத்தை ஏற்படுத்துகின்றனர்" என குற்றம் சாட்டினார்.

"முதல்வர் ஸ்டாலினுக்கு இது குறித்தெல்லாம் கவலை இல்லை. தினமும் எங்காவது செல்ல வேண்டியது ரிமோட் எடுக்க வேண்டியது, திறக்க வேண்டியது, போஸ் கொடுக்க வேண்டியது, ரிப்பீட்டு ( மாநாடு பட பாணியில் கிண்டல் செய்தார்) இதான் அவர் வேலை" என்று கலாய்த்து பேசினார்.

Trending News