நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த, 1,000 ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் மாயமாகியுள்ளது. பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏழாம் நுாற்றாண்டை சேர்ந்த நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் அமைத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த விலைமதிப்பற்ற மரகத லிங்கம் உள்ளது.
கடந்த ஒரு வாரமாக விஜய தசமி விழாகவை முன்னிட்டு மரகத லிங்கத்திற்கும் தினமும் பூஜை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலை பூஜை முடிந்து மரகத லிங்கத்தை இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி விட்டு அர்ச்சகர் சென்றார். மாலை வேளையில் பூஜை செய்ய மரகத லிங்கத்தை எடுக்கச் சென்ற அர்ச்சகர், பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
கோவில் நிர்வாகம் மூலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் கைரேகை நிபுனர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த மரகத லிங்கம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் மீது, பால், தேன், தண்ணீர் ஆகியவற்றால் மக்கள் அபிஷேகம் செய்து வந்தனர். அபிஷேகம் செய்யப்படும் அந்த தீர்த்தத்தை தொடர்ந்து 48 நாட்கள் பருகினால், பல்வேறு உடல் பிரச்னைகள் சரியாகும் எனபது ஐதிகம். மாயமான லிங்கத்திற்கு 1,000 ஆண்டு பழமையானது. இவ்வவளவு பழைமையான லிங்கம் தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால், அதன் மருத்துவ குணம் அதிகரித்திருக்கும். இதனால் தீர்த்தத்தை பருகினால் நன்மை உண்டாகுகிறது என்பது இந்த சிறப்பாகும்.
மரகத லிங்கம் குறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது:- மரகதம் நம் நாட்டில் கிடைக்காது, கிழக்காசிய நாடுகளில் மட்டுமே கிடைக்க கூடிய அரிய வகை கல். திருக்குவளை, பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு மரகத கல்லை கொண்டு வந்து இந்த கோவிலுக்கு லிங்கம் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:- இந்த கோவிலில் உள்ள மரகத லிங்கம், 1983-ம் ஆண்டு தொல்பொருள் ஆய்வுக் கழகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விசாரித்தால் கிடைக்க வாய்ப்புள்ளது என அவர்கள் கூறினார்கள்.