அட பாவமே... நடுரோட்டில் மொட்டை அடித்த பாஜக பிரமுகர் - காரணம் அண்ணாமலை தானாம்...!

Tamil Nadu BJP Latest News: அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என மாற்று கட்சி பிரமுகர்களிடம் சவால் விட்ட பாஜக பிரமுகர் ஒருவர், கோவையில் அவரின் தோல்வியை அடுத்து மொட்டையடித்து மிசையை மழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Jun 6, 2024, 03:12 PM IST
  • இந்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்ததுள்ளது.
  • அண்ணாமலை 1 லட்சத்துக்கும் மேலான வாக்குகளில் தோற்றார்.
  • பாஜக, அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் ஒரே இடத்தை கூட கைப்பற்றவில்லை.
அட பாவமே... நடுரோட்டில் மொட்டை அடித்த பாஜக பிரமுகர் - காரணம் அண்ணாமலை தானாம்...! title=

Tamil Nadu BJP Latest News: 18வது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. 293 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றி மீண்டும் முறையாவது ஆட்சி அமைக்கிறது. ஆனால், 2014 மற்றும் 2024 தேர்தலை போல் இன்றி இம்முறை எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை எனலாம். பாஜகவால் கடந்த முறை தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், இம்முறை 240 தொகுதிகளை மட்டுமே அக்கட்சி கைப்பற்றியது. 

இருப்பினும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இம்முறை ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக தள்ளப்பட்டுள்ளது. வரும் ஜூன் 8ஆம் தேதி பிரதமர் மோடி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமராக பொறுப்பேற்று கொள்கிறார். இன்றுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சிக்கும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் அமைச்சரவையில் எந்தெந்த பொறுப்பை பாஜக ஒதுக்க உள்ளது என்பது இன்றே ஏறத்தாழ உறுதியாகிவிடும். அதேபோல், நாளை டெல்லி நாடாளுமன்ற கூட்ட அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது, இதில் அவர்கள் பிரதமர் மோடியை பிரதமராக தேர்வு செய்வார்கள். 

பாஜகவை கைவிட்ட ராமர் கோவில்...?

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது என்றாலும் அந்த முகாமில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் ஏதுமில்லை. மாறாக இந்தியா கூட்டணி இந்த வெற்றியை கொண்டாடி வருகிறது. பாஜக அதன் கோட்டை என கருதிய பல இடங்களில் சறுக்கியும் உள்ளது. குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணியை விட இந்தியா கூட்டணிதான் அதிக தொகுதிகளை (42) கைப்பற்றியிருக்கிறது. குறிப்பாக, ராமர் கோவில் பாஜகவுக்கு பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராமர் கோயில் அமைந்துள்ள பகுதியின் அருகே உள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியைடந்திருப்பது பலரையும் ஆச்சர்யத்திற்கு ஆளாக்கி உள்ளது.

மேலும் படிக்க | வெற்றிகரமான தோல்வி... சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் - அண்ணாமலையின் திட்டம் இதுதான்!

ஒரு இடம் கூட இல்லை...

அதேபோல், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி பல இடங்களையும், அதில் பாஜக ஓரிரண்டு இடங்களையாவது நிச்சயம் கைப்பற்றும் என அக்கட்சியினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். அவர்களின் வாக்கு சதவீதம் அதிகமாகியிருக்கிறது என்றாலும் கூட ஒருவர் கூட இங்கிருந்து பாஜக சார்பில் மக்களவைக்கு செல்லாதது அவர்களுக்கு சிக்கலாக அமையலாம். 2014இல் பொன். ராதாகிருஷ்ணன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பாஜக கூட்டணியில் வென்றிருந்தனர். அதேபோல், 2019இல் பாஜக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் கூட வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இம்முறை அதவும் பாஜகவுக்கு இல்லை. எனவே, தமிழ்நாடு சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி அதிகமாகி உள்ளது. 

அண்ணாமலை பெற்ற வாக்குகள்

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் அடைந்த தோல்வி அவர்களுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. கோவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜகுமார் 5 லட்சத்து 68 ஆயிரத்து 200 வாக்குகளை பெற்றார். பாஜகவின் அண்ணாமலை 4 லட்சத்து 50 ஆயிரத்து 132 வாக்குகளை பெற்றார். இதனால், 1 லட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் 2 லட்சத்து 36 ஆயிரத்து 490 வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாவது இடத்தைதான் பிடித்தார். 

மொட்டையடித்த பாஜக பிரமுகர்

அந்த வகையில் அண்ணாமலையின் தோல்வியை அடுத்து பாஜக தொண்டர் ஒருவர் மொட்டையடித்த சம்பவம் இன்று நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் உடன்குடி  ஒன்றிய பாரதிய ஜனதா  கட்சி மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். 

இவர் மக்களவை தேர்தலையொட்டி அதே ஊரைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நண்பர்களிடம் பாஜக தலைவர்  அண்ணாமலை கோவை  தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அவ்வாறு அவர் வெற்றி பெறவில்லை என்றால் பரமன்குறிச்சி பஜாரில்  மொட்டை போட்டு  ரவுண்டானாவை  சுற்றி வருவேன் என்றும் சவால் விட்டதாக தெரிகிறது. அந்த வகையில், மக்களவைத் தேர்தலில்  பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததால்  பாஜக பிரமுகர் ஜெய்சங்கர் பரமன்குறிச்சி பஜாரில் மொட்டையடித்து கொண்டார். பின்னர் ரவுண்டானாவையும் சுற்றி வந்தார்.

மேலும் படிக்க | சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டார்: எஸ்.வி.சேகர் ஜீ தமிழ் நியூஸுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News