மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்க வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்!!
அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால், அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தீவுப் பகுதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே, மீனவர்கள் அந்தமான் கடற் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்த பாலச்சந்திரன், காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்க வேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அனுமதி சீட்டு வழங்க வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையொட்டி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மீன்பிடிக்க சென்று கரை திரும்பாத மீனவர்கள் உடனே கரை திரும்ப தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.