புது டெல்லி: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் தேதியை, இந்த மாத முதல் வாரத்தில் சனிக்கிழமையன்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் சில அறிவுரைகளை மாநில தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியது. அதாவது, 2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனக் கூறி, தேர்தல் நடத்த தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் 9 புதிய மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி பின்பற்றாமல் தேர்தலை நடத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளத மனுவில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக, கடந்த 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் உச்சநீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதாவது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை மற்றும் தொகுதி சுழற்சி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிம்னற்ற உத்தரவு கடைபிடிக்காமல் சட்டவிரோதமாக மாநில தேர்தலை ஆணையர் பழனிசாமி செயல்படுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், இந்த மாதம் (டிசம்பர்) 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.