சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து உள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. தெலுங்கானாவில் தமிழிசைக்கு மாநில முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது.
அதேபோல் கேரளாவில் ஆரிப் கானுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கு மோதல் நிலவி வருகிறது. அங்கு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய சொல்லும் அளவிற்கு ஆளுநர் அத்துமீறி வருகிறார்.
ஆளுநர் ஆர். என் ரவி
தமிழ்நாட்டில் மோதல் இந்த அளவிற்கு கைமீறி செல்லவில்லை என்றாலும் ஆளுநருக்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் பல விஷயங்களில் கருத்து மோதல் உள்ளது. முக்கியமாக துணை வேந்தர்களை முதல்வரே நியமிக்கும் புதிய வேந்தர் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் டெல்லிக்கு அனுப்பவில்லை.
அதேபோல் அவர் பாஜக நிர்வாகிகள் போல பேசி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார்.
மேலும் படிக்க | தென்னகத்து போஸ் முத்துராமலிங்க தேவர் - மு.க. ஸ்டாலின் ட்வீட்
என்ன பேசுகிறார் ஆளுநர் ஆர். என் ரவி?
வரலாற்று ரீதியாக சில தவறான விஷயங்களை இவர் பேசுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுதான் சனாதன தர்மம். இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கம் உள்ளது. அது தமிழ்நாட்டில் உள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் சானதான கலாச்சாரம் என்று குறிப்பிட்டார்.
அதோடு இல்லாமல் திராவிட கலாச்சாரம் இடையில் தோன்றியது என்றும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இவரின் செயல்பாடுகள் சில அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகின்றன.
அரசியல்
சமீபத்தில் கோவை கார் வெடிப்பு என்ஐஏ விசாரணைக்கு தாமதமாக பரிந்துரை செய்யப்பட்டதை ஆளுநர் ரவி விமர்சனம் செய்து இருந்தார். அவரின் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. ஆளுநர் ஒருவர் இப்படி தனது அதிகாரத்தை மீறி, கட்சித் தலைவர் போல செயல்படுவதாக திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து உள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் படிக்க | 'எங்கள் நிலத்தை போலீஸ் அதிகாரியே அபகரித்துள்ளார்’: குற்றம் சாட்டும் NRI தம்பதி
அழைப்பு
திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்பிகளுக்கு அதன் பொருளாளர் எம்பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார். அதில் நாளைக்குள் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து இந்த குறிப்பாணையில் கையெழுத்து போட வேண்டும். அதை குடியரசுத் தலைவரிடம் கொடுக்க உள்ளோம். ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று திமுக தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.
அறிக்கை
திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொலவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதற்குக் காரணம், தமிழகத்தில் தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமோ, அல்லது தன்னை நோக்கிய கவனிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்ற தாகமா என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை. அதுபற்றி கவலைப்படவுமில்லை, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தமிழகத்தில் தான் அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை நடக்கிறது: திருமாவளவன் வருத்தம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ