கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். அதை பரிசோதிக்காமல் ரத்த வங்கி ஊழியர்கள் ரத்தம் எடுத்து சேமித்து வைத்துள்ளனர். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில், ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் ரத்தம் ஏற்றும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனை சென்ற அந்த பெண்ணுக்கு ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு HIV தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த அரசு மருத்துவர்கள் அவரை அழைத்து ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு HIV இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த ரத்தம் எங்கிருந்து வந்தது என்று விசாரித்ததில், சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ரத்த தானம் செய்துள்ளார் என தெரியவந்தது. ஆனால் இதற்கு முன்பே ரத்த தானம் செய்த ரமேஷ் வெளிநாடு செல்வதற்காக மதுரையில் ரத்த பரிசோதனை செய்துள்ளார். அப்பொழுது அவருக்கு HIV பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனே தான் ரத்த தானம் செய்த சிவகாசி அரசு மருத்துவமனை தனக்கு HIV இருப்பதாகவும், அந்த ரத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இதற்க்கு இடைப்பட்ட காலத்தில் சிவகாசி அரசு மருத்துவமனையிலிருந்து சாத்தூர் மருத்துவமனைக்கு HIV பாதித்த ரத்தம் சென்றுள்ளது. அந்த ரத்தம் தான் 8 மாத கர்ப்பிணி பெண் செலுத்தி உள்ளனர். இது முழுக்க முழுக்க மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.
எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தனி அறையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறோம். அவர்களுக்கு இந்த சிகிச்சையில் நம்பிக்கை இல்லையென்றால், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படும். எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்தார்.
இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்டதைக் குறித்து "இரத்தம் கொதிக்கிறது" எனக்கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியாதாவது:-
இரத்தம் கொதிக்கிறது!
இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன?
உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்!
குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா?
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.