புதுப்பொலிவுடன் சேப்பாக்கம் மைதானம்... கருணாநிதி பெயரில் கேலரியை திறந்துவைத்தார் ஸ்டாலின்

Chennai Chepauk Stadium: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் மு.கருணாநிதி பெயரில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்த நிலையில், அந்த மைதானத்தின் வரலாறு குறித்தும், சிறப்பம்சங்கள் குறித்தும் இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 17, 2023, 06:44 PM IST
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது 36,446 பேர் அமர்ந்து போட்டியை காணலாம்.
  • மைதானத்தில் தற்போது இரு சக்கர வாகனம் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
  • இங்கு முதல் முறையாக கேலரிக்கு ஒருவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புதுப்பொலிவுடன் சேப்பாக்கம் மைதானம்... கருணாநிதி பெயரில் கேலரியை திறந்துவைத்தார் ஸ்டாலின் title=

Chennai Chepauk Stadium: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் மு.கருணாநிதி பெயரில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்த நிலையில், அந்த மைதானத்தின் வரலாறு குறித்தும், சிறப்பம்சங்கள் குறித்தும் இதில் காணலாம். 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கட்டப்பட்ட கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரியை திறந்து வைத்து "கலைஞர் மு.கருணாநிதி" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, இந்தியா சிமெண்ட் இயக்குநர் என்.ஸ்ரீனிவாசன், கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சிறப்புமிக்க இந்த மைதானத்தில் முதல்முறையாக கேலரிக்கு ஒருவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் மைதானத்தின் புதிய வசதிகள், சிறப்புமிக்க வரலாறு, சிறப்பம்சங்கள், இங்கு படைக்கப்பட்ட முக்கிய சாதனைகள், மைல்கல்கள் உள்ளிட்டவை பார்க்கலாம்.

மேலும் படிக்க | சேப்பாக்கத்துக்கு டூர் போகலாம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் திட்டம்

புதிய வசதிகள்

- ஏற்கனவே உள்ள 31 ஆயிரத்து 140 இருக்கைகளுடன் புதிதாக 5 ஆயிரத்து 306 இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 36 ஆயிரத்து 446 இருக்கைகளுடன் சேப்பாக்கம் புத்துயிர் பெற்றுள்ளது.

- மேலும் 655 நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடமும், 655 இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன், மைதானத்திற்குள் பார்க்கிங் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- அண்ணா பெவிலியனில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரியில் சர்வதேச தரத்தில் வீரர்களுக்கான ட்ரெசிங் ரூம் எனப்படும் ஓய்வறை மற்றும் மிக முக்கிய நபர்கள் அமர்ந்து பார்க்கும் சிறப்பு இருக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

பழைமையும்... பெருமையும்... 

உலகிலையே அதிக சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு பிறகு பழமை வாய்ந்த மைதானங்களில் ஒன்றுதான் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம். சென்னையின் அடையாளங்களில் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. 

செட்டிநாடு ராஜாவாக இருந்த, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் என்பவரின் இளைய மகான சிதம்பரம் அவர்களின் பெயரே இம்மைதானத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. 1956ஆம் ஆண்டில் பிசிசிஐயின் துணை தலைவராக தேர்வான சிதம்பரம், 1960 முதல் 1963ஆம் ஆண்டுவரை தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இவர் சுமார் 32 ஆண்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். சேப்பாக்கத்தில் உள்ள கிளப் மைதானத்தில் மைதானம் கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 

முக்கிய மைல்கல்கள்

1980ஆம் ஆண்டு, மைதானம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட, பின்னர் அவரது நினைவாக எம்.ஏ. சிதம்பரம் மைதானம் எனப் பெயரிடப்பட்டது. சுமார் 36,446 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இங்குதான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியை 1952ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்றது. 1996இல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன.

1916ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் ஏறக்குறைய 100 ஆண்டுகளை தாண்டி பல்வேறு போட்டிகளை கண்டு வருகிறது. சுமார் 36000 இருக்கைகள் கொண்ட இந்த மைதானம் டான் பிராட் மேன், சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ் என பல்வேறு ஜாம்பவான்கள் கால்பதித்த மைதானம்.

இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சாயித் அன்வர் 194 ரன்கள் அடித்தது, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் 319 ரன்கள் குவித்தது, ராகுல் டிராவிட் 10 ஆயிரம் ரன்களை கடந்தது, டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது, தோனியின் முதல் டெஸ்ட் இரட்டை சதம், கருண் நாயரின் முதல் முச்சதம், அதிக டெஸ்ட் இரட்டை சதங்களை கொண்ட மைதானம், இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி என பல்வேறு மைல்கற்களையும், சாதனைகளையும் கொண்ட மைதானமாகும்.

மூன்று கேலரிகளுக்கு சீல்

உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் போட்டிகள், சர்வதேச போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடந்த மைதானத்தில்  2011ஆம் ஆண்டு சீரமைப்பு பணி நடைபெற்றது. அப்போது ஐ, ஜே, கே என்ற பெயரில் 3 கேலரிகள் புதிதாகக் கட்டப்பட்டன.

இந்த மூன்று கேலரிகளிலும் சேர்த்து மொத்தம் 12 ஆயிரம் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.ஆனால் இந்த கேலரிகள் விதிமுறைகளை மீறி கட்டியிருப்பதாகவும், முறையான அனுமதி பெறவில்லை எனவும் கூறி சென்னை மாநகராட்சி, அந்த 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.

புதுப்பொலிவுடன்...

இதனால் மிகவும் புகழ்பெற்ற மைதானத்தில் இருக்கைகள் குறைந்ததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பல்வேறு போட்டிகளை நேரில் சென்று காணமுடியமல் இருந்தனர். இந்த மைதானத்தில் அதிக போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த மூன்று கேலரிகளும் திறக்கப்பட்டு மைதானம் புனரமைப்பு செய்து தற்போது திறக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி என்றாலே அதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. என்னதான் பெரிய பெரிய தொலைக்காட்சியில் போட்டியை பார்த்தாலும் நேரில் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோஷம் எதிலும் வராது என்பது ரசிகர்களின் மனவோட்டம். தற்போது, நீண்ட நாட்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நூறு சதவீத இருக்கைகளுடன் ரசிகர்கள் போட்டியை காண இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

களைக்கட்ட காத்திருக்கும் சேப்பாக்கம்

கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு பார்ப்பது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் களத்தில் இருக்கும் வீரருக்கு புதிய ஊக்கத்தை தரும். இந்த நிலையில் பிரபலமான சேப்பாக்கம் மைதானத்தில் நூறு சதவீத ரசிகர்கள் உடன் மீண்டும் போட்டிகள் நடைபெற இருப்பது குறிப்பாக சர்வதேச போட்டி, ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. அதிலும் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி இங்கு நடைபெற இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்கின்றனர் ரசிகர்கள்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி, பின்னர் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் என சென்னை சேப்பாக்கம் மைதானம் களைக்கட்ட உள்ளது.  போட்டியை காண இப்போதில் இருந்தே தயாராகும் விதமாக டிக்கெட் முன்பதிவிற்கு  ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | IPL 2024 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக விளையாடுவார் தோனி! ரசிகர்களுக்கு குஷி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News