சீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து - ராமதாஸ் எச்சரிக்கை

சீன உளவு கப்பல் இலங்கைக்குள் வருவதால் இந்தியாவுக்கு ஆபத்த். எனவே அந்தக் கப்பலை இலங்கைக்குள் நுழையவிடாமல் தடுக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 31, 2022, 03:19 PM IST
  • சீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து என ராமதாஸ் எச்சரிக்கை
  • அதனைத் தடுத்த நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தல்
  • தெற்கிலிருந்து இந்தியாவுக்கு சீனா எந்த தொந்தரவும் கொடுக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை
சீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து - ராமதாஸ் எச்சரிக்கை title=

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீன உளவுக் கப்பலின் வருகை, இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். சீனாவின் ஜியாங்யின் துறைமுகத்திலிருந்து கடந்த 13-ஆம் தேதி புறப்பட்ட யுவான் வாங் கப்பல் தைவானைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி அந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடையும் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அப்போதே அது குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது. அப்போது அதை திட்டவட்டமாக மறுத்த இலங்கை அரசு, இப்போது உளவுக்கப்பலின் வருகையை உறுதி செய்திருக்கிறது. இலங்கை அரசின் இந்த தடுமாற்றத்திலிருந்தே சீனக் கப்பலின் வருகை இந்தியாவுக்கு ஆபத்தானது என்பதை உணரலாம்.

சீன உளவுக்கப்பல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். 750 கி.மீக்கும் அதிக சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் சீனக் கப்பலுக்கு உண்டு. அதாவது கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் யுவான் வாங் கப்பல் எளிதில் உளவு பார்த்து, அது குறித்த தகவல்களையும் சேகரித்து விட முடியும். அணுசக்தி ஆராய்ச்சி நிலையங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் எத்தகைய தொடர்பு கொண்டவை என்பதை அறிந்தவர்களால், சீன கப்பலின் இலங்கை வருகை தென்னிந்தியாவுக்கு எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க | நில அளவையர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்கள் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இந்தியாவை உளவு பார்க்க சீனா துடிப்பதும், அதற்கு இலங்கை உதவுவதும் இது முதல்முறையல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி சீனாவின் சாங்ஷெங் -2 நீர்மூழ்கிக் கப்பலும், சாங் ஜிங் தாவ் போக்கப்பலும் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து 5 நாட்கள் இந்திய நிலைகளை உளவு பார்க்க முயன்றன. இலங்கைக்கு கொடுத்த கடனை காரணம் காட்டி அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலங்களையும் வளைத்து விட்ட சீனா, அங்கிருந்தும் இந்தியாவை உளவு பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. கடந்த திசம்பர் மாதத்தில் இலங்கைக்கான சீனத் தூதர் சென்ஹாங், யாழ்ப்பாணத்திற்கு சென்று, அங்கிருந்து படகு மூலம் இராமேஸ்வரத்தை ஒட்டிய இராமர் பாலத்தின் மூன்றாவது மணற்திட்டு வரை பயணித்து, இந்தியாவை உளவு பார்ப்பதற்கான உத்திகளை வகுத்துச் சென்றிருந்தார்.

அப்போதே சீனாவின் இத்தகைய சதித்திட்டங்களை சுட்டிக்காட்டி, இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்திருந்தேன். சீனாவின் முந்தைய சதித் திட்டங்களின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். சீன உளவுக் கப்பலின் வருகையை தொடக்கத்தில் மறைத்த இலங்கை அரசு, பின்னர் உண்மை அம்பலமான பிறகு தான் ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சீனச் சதிகளுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் அப்பட்டமாக துணைபோகின்றனர் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம்.சீனக் கப்பலின் இலங்கை வருகை என்பது ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன்படிக்கையை மீறிய செயல் ஆகும். சீனக் கப்பலை இலங்கை அனுமதிப்பது 1987-ஆம் ஆண்டு இந்திய, இலங்கை அமைதி உடன்பாட்டிற்கு எதிரான செயலாகும். அந்த உடன்பாட்டின்படி இலங்கை மண்ணை இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது. சீனக் கப்பலை அனுமதிப்பது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவு உள்ளிட்ட ஏராளமான உதவிகளைப் பெற்றுக் கொண்டாலும் கூட, ஒரு நாளும் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததில்லை. இப்போதும் கூட, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கைக்கு கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.32,000 கோடி உதவி வழங்கியுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும், இந்தியாவுக்கு எதிராக, சீனாவுக்கு சாதகமாக செயல்படும் இலங்கையை இனியும் நம்ப வேண்டுமா? என்பது குறித்து இந்தியா முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது.

மேலும் படிக்க | லாக் அப் மரணங்கள் இல்லாத நிலையை உருவாக்குங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

வடக்கில் லடாக் பகுதியில், இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவி தொல்லை கொடுத்து வரும் சீனா, தெற்கில் இலங்கையிலிருந்து தொல்லை கொடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இலங்கை என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கான கேடயமாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, இந்தியா மீதான தாக்குதலுக்கான தளமாக மாறிவிடக் கூடாது. இதை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் தான் இந்தியா பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வகுக்க வேண்டும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் 11-ஆம் தேதி வரவிருக்கும் சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சீனக் கப்பலை இலங்கை அனுமதித்தால், இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எத்தகைய கடினமான நடவடிக்கையையும் எடுப்பதற்கு மத்திய அரசு தயங்கக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News