காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக 'காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம்' என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதிமுக சார்பில் நடத்தப்படும் இந்த காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் டெல்டா மாவட்டங்களில் ஜூன் 18 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, இதன் முதல்கட்டமாக வெற்றி விளக்கப் பொதுக் கூட்டம் மயிலாடுதுறையில் இன்று நடைபெறுகிறது.
கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டு எடுத்தது குறித்து முதலமைச்சர் சிறப்புரையாற்றுகிறார். இதில், தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட திராளானோர் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக காலை 11 மணியளவில் விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் மயிலாடுதுறை காவிரி இல்லத்திற்கு செல்லும் அவர், மாலை 5 மணியளவில் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மண்டல ஐ.ஜி. வரதராஜூலு தலைமையில் 7 எஸ்.பிக்கள், 10 ஏ.டி.எஸ்.பி, 25 டிஎஸ்பி, 76 இன்ஸ்பெக்டர்கள் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.