இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் இன்று சென்னை வருகின்றனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் செலவுகளை கண்காணிக்க அனைத்து தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையர்கள், தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். மேலும் தமிழகத்தில் மூன்று நாள்கள் பயணம் முடிந்ததும், தேர்தல் ஆணையர்கள் கேரள மாநிலத்திற்குச் செல்லவுள்ளனர்.