பஸ் ஓட்ட கட்டாயப்படுத்தியதால் விழுப்புரத்தில் அரசு பஸ் டிரைவர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
13_வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்கிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்துக்கு அரசே பொறுப்பேற்று அதனை ஈடுசெய்ய வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை நிர்வாக பிரதிநிதிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இன்று வேலைநிறுத்தம் தொடங்கும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று தமிழக்கத்தில் போக்குவரத்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் விழுப்புரம் மூன்றாவது பணிமனையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஹென்றி பால்ராஜ், இவர் தன்னை பஸ் ஓட்ட கட்டாயப்படுத்தியதால் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். பணி முடிந்து ஓய்வு எடுத்த அவரை பஸ்சை இயக்க கிளை மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து பஸ் ஓட்டியதால் பணிக்கு செல்ல ஹென்றி பால்ராஜ் மறுத்துள்ளார்.
ஆனால் கிளை மேலாளர் தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் பணிமுனையின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம், கையில் எலும்பு முறிவடைந்தது. இதையடுத்து அவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.