தமிழ்நாட்டுக்கு ஒன்னும் செய்யலைனு அமித்ஷா ஒப்புதல் வாக்குமூலம் - டிஆர் பாலு பதிலடி

ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட அளிக்கவில்லை என அமித் ஷா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக வேலூரில் பதிலடி கொடுத்துள்ளார் டிஆர் பாலு.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 11, 2023, 10:03 PM IST
  • அமித் ஷாவுக்கு டிஆர் பாலு பதிலடி
  • தமிழ்நாட்டுக்கு ஒன்னும் செய்யவில்லை
  • உளறிக் கொண்டிருக்கிறார் உள்துறை அமைச்சர்
தமிழ்நாட்டுக்கு ஒன்னும் செய்யலைனு அமித்ஷா ஒப்புதல் வாக்குமூலம் - டிஆர் பாலு பதிலடி title=

வேலூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டிஆர் பாலு கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசும்போது, " தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முழுக்க முழுக்க கற்பனைக் கதையை உருவாக்கி, தமிழ்நாட்டிற்குப் பல திட்டங்களை அள்ளி வீசியது போல் “கானல் நீர்” தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். பா.ஜ.க. ஆட்சியில்  தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது அக்மார்க் உண்மை என்பதை அமித் ஷாவே புரிந்து கொண்டு, திசை திருப்பி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தமிழ்நாட்டிற்கு சாதித்த திட்டங்களைபோல் ஒன்று கூட இந்த 9 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. தன்னுடைய பேச்சில் அப்படியொரு சிறப்புத் திட்டத்தை சுட்டிக்காட்ட முடியாமல் திணறிப் போன உள்துறை அமைச்சர், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசியிருக்கிறார். உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள நிதி ஒதுக்கீடுகள், மானியங்கள், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய அரசியல் சட்டக் கடமை. அது பா.ஜ.க.ஆட்சியில் இருப்பதால் வந்தது இல்லை. எந்த அரசு ஒன்றியத்தில் இருந்தாலும் அதைக் கொடுக்காமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி மூலம் தமிழ்நாட்டிலிருந்து அதிக வருவாய் ஒன்றியத்திற்குக் கிடைக்கும்போது கூட தமிழ்நாட்டை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

மேலும் படிக்க | 'முதலமைச்சரே காதை கூர்மையாக்கி கேளுங்க' - திட்டங்களின் பட்டியலை அடுக்கிய அமித்ஷா!

அதற்கு பதில், தமிழ்நாட்டில் வசூலித்து உ.பி.யிலும்- பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் செலவழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி. தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. அதற்கும் பா.ஜ.க. அரசு ஒன்றும் பங்களிப்பு செய்திடவில்லை. ஏதாவது ஒரு நெடுஞ்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்தால் கூட ஆந்திரா, கர்நாடக பயன்பெற்று அதில் மீதி தமிழ்நாடு பயன்பெறும் வகையில்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டதே தவிர, தமிழ்நாட்டிற்கு என்று பிரத்தியேகமாக எந்த நெடுஞ்சாலை சிறப்புத் திட்டத்தையும் அளிக்கவில்லை.

தமிழ்நாட்டை எப்படி ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். ஒன்றிய வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஆணையம் பகிர்ந்தளிப்பது குறைக்கப்பட்டுள்ளது பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய ஆட்சியில்தான். ஒன்றிய வரி வருவாய்க்கு தமிழ்நாடு அளிப்பது 1.6 லட்சம் கோடி ரூபாய். ஆனால் அந்த ஒன்றிய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்தளிப்பது வெறும் 41 ஆயிரம் கோடி ரூபாய்.  இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒன்றிய வரி வருவாய்க்கு 100 ரூபாய் தமிழ்நாடு கொடுத்தால், பா.ஜ.க. ஆட்சி தமிழ்நாட்டிற்கு 20 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறது. 

தமிழ்நாட்டிற்கு கடந்த 9 வருடத்தில் இரண்டு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் அளித்ததாக கூறும் பொழுது, அதே காலகட்டத்தில் உத்தரபிரதேசத்திற்கு 10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை அள்ளித் தந்ததை ஏன் மறைக்க வேண்டும்?. ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி என்பது, சென்னை மாநகரத்திற்குப் பேரிடர் மேலாண்மைக்காக நிதி ஆணையம் பரிந்துரைத்த 500 கோடி ரூபாய் நிதியை இரண்டு ஆண்டுகளாக கொடுக்காத ஆட்சி. 2015-இல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டாத ஆட்சி. 

வங்கி, ரயில்வே, இராணுவம், அஞ்சல் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை ஒன்றிய அரசு இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் நடத்துகிறது. தமிழில் இல்லை. உள்துறை அமைச்சர் இதை மறுக்க முடியுமா?. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களை இந்திமயமாக்கி, அங்கு தமிழ்நாட்டு இளைஞர்களே வேலைக்குச் செல்ல முடியாத நிலையை உருவாக்கியுள்ளது பா.ஜ.க. ஆட்சிதான் என்பதை உள்துறை அமைச்சர் மறுக்க முடியுமா?

9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் இல்லை என்கிறார். ஊழலே செய்யாத ஆட்சியில் ஏன் அதானி பற்றி நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு பயப்பட வேண்டும்?. ஊழலே இல்லை என்றால் ஏன் ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திலேயே “நாட்டின் ரகசியம்” என வாதிட வேண்டும்?. நாட்டு மக்கள் குஜராத் கலவரத்தையும் - அந்த வழக்குகள் எப்படி நீர்த்துப் போக வைக்கப்பட்டன என்பதையும் - சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு நீதிபதிக்கு என்ன ஆனது என்பதையும் இன்னும் மறந்து விடவில்லை. தமிழ்நாட்டை - தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருப்பதே ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் என சாடியுள்ளார். 

மேலும் படிக்க | 'மனைவியை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்' தமிழக ராணுவ வீரரின் வீடியோவால் சர்ச்சை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News