காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!!

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!!

Last Updated : Feb 20, 2020, 04:14 PM IST
காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!! title=

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!!

சென்னை: டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. தஞ்சை, திருவாரூர். நாகை, கடலூர், புதுக்கோட்டை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளாகும். வேளாண் பயன்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களுமே வேளாண் நிலம் என பொருள்படும் என மசோதா நிறைவேறியது.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், பழனிசாமி நேற்று (பிப்.,19) தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து, இந்த மசோதாவை முதல்வர் பழனிசாமி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான மசோதாவை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்திற்கு என்ன பதில் கிடைத்துள்ளது என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மசோதாவில், காவிரி டெல்டாவைச் சேர்ந்த திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுபட்டதற்கு என்ன காரணம்? என்றும் அவர் வினவினார். இந்த மசோதா விவசாயிகளுக்கு முழுமையான பாதுகாப்பை தரும் மசோதாவாக இருக்கும் வகையில் கொண்டு வர இதனை தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் அரசை கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரமும் உள்ளதாகக் குறிப்பிட்டார். சட்டம் இயற்றும்போது சிறுசிறு குறைகள் இருக்கலாம் என்றும், தேவைப்பட்டால் அதனை அவ்வப்போது திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த திமுக, மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியது. எனினும், திமுகவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து, மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. 

இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் இந்த மசோதா விவசாயிகளுக்கு முழுமையான பாதுகாப்பை அளிப்பதாகவும், இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால், தமிழக அரசுக்கு நற்பெயர் வந்துவிடும் என்பதற்காகவே திமுக வெளிநடப்பு செய்வதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, மசோதாவை சட்டமாக இயற்றுவதன் மூலம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. 

மேலும், ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும், விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதுமட்டுமின்றி தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு உருவாக்கப்படும் என்றும், தனது தலைமையில் அந்த அமைப்பு செயல்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டார். 

 

Trending News