கன்னியாகுமரி மாவட்டம் முதலார் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சித்திரங்கோடு பகுதியில் நகை அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஜூன் 13ஆம் தேதியன்று,சுரேஷ் வெளியே சென்றுவிட அவரது கடையில் பெண் ஊழியர் ஒருவர் மட்டும் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், தன்னை காவியா என்று அறிமுகப்படுத்தி 9-கிராம் எடை கொண்ட வளையல் ஒன்றை 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து பணத்தை பெற்று சென்றுள்ளார்.
மாலை கடைக்கு வந்த சுரேஷ் அடகு பிடித்த நகைகளை சரிபார்த்த போது 1-வளையல் மட்டும் சந்தேகத்திற்கு இடமாக இருந்துள்ளது. அதை சோதித்த போது அது போலி வளையல் என்பது தெரிய வந்தது. உடனே சுரேஷ் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சொகுசு காரில் ஒரு ஆணுடன் வந்து இறங்கிய இளம்பெண், போலி வளையலை அடகு வைத்து செல்வது பதிவாகி இருந்தது.
இதனையடுத்து கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து சுரேஷ் புகாரளித்தார். புகாரின் பேரில் விசாரணையும் தொடங்கியது. இதற்கிடையே, கொற்றிகோடு போலீசார் வேர் கிளம்பி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த சொகுசு காரை மடக்கி காரை ஓட்டி வந்த அந்த நபரை விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அதில்,அவர் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியான ஜேசுராஜா என்பதும் செட்டிக்குளம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. செட்டிகுளம் பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் ஜேசுராஜாவுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீடு கார் என சொகுசாக வாழ விரும்பிய ஜேசுராஜாவுக்கு சலூன் கடை வருமானம் கைகொடுக்காத நிலையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக திட்டமிட்டிருக்கிறார்.
அப்போதுதான், கணவனை இழந்து 2-குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வந்த செட்டிகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் அனுஷா என்பவருடன் ஜேசுராஜாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது. பின்னர், அனுஷாவை பயன்படுத்தி கேரளாவிலிருந்த கவரிங் வளையல்களை வாங்கி வந்து ஆளில்லா நகை அடகு பிடிக்கும் கடைகளை குறி வைத்திருக்கிறார்கள். பவ்வியமாகப் பேசி அவசர தேவைக்கு அடகு வைப்பது போல் போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்படி லட்சக்கணக்கான ரூபாய்க்கு போலி நகைகளை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தில் மனைவிக்கு 3-மாடியில் பங்களா வீடும் கட்டி கொடுத்திருக்கிறார். மேலும், ரகசிய காதலியுடன் சொகுசு காரில் பல்வேறு பகுதிகளுக்கு இன்ப சுற்றுலா சென்று அறை எடுத்து தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் சுரேஷின் கடை உட்பட 7-நகை அடகு வைக்கும் கடைகளில் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். அப்போதுதான் வேர்கிளம்பி பகுதியில் உள்ள நகை அடகு வைக்கும் கடைக்கு வந்தபோது கையும் களவுமாக சிக்கி கொண்டனர். இதனையடுத்து சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் ஜேசுராஜாவை கைதுசெய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடித் தலைமறைவாக உள்ள ரகசிய காதலி அனுஷாவை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம் - முதலிரவில் ட்விஸ்ட் வைத்த மணப்பெண் !
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜேசுராஜா- அனுஷயா ஜோடியாக சென்று போலி நகைகள் அடகு வைத்துள்ளதாக சிசிடிவி ஆதாரங்களுடன் புகார்கள் இருப்பதாக தெரிவிக்கும் போலீசார் ஜேசுராஜாவை போலீஸ் காவலில் எடுத்தும், அனுஷாவையும் பிடித்து மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | படிச்ச முட்டாள்களிலேயே No.1 முட்டாள் அண்ணாமலை - யார் சொன்னது ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR