ஆண்டுதோறும் இனி நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்!!
ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய தினம் முதலமைச்சர் பழனிசாமி விதி 110-ன் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். குறிப்பாக நீர் மேலாண்மை தீவிரப்படுத்தப்படும். சென்னை மாநகரில் உள்ள ஏரிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். ஆறுகள் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், ஆண்டு தோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும். திருக்குறள் அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்க்கப்படும். மத்திய கல்வி நிறுவனங்களில் பயில கல்வி உதவித் தொகை வழங்கப்படும். ரூ.50 லட்சம் செலவில் தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணி மண்டபம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.
நவம்பர் 1 ஆம் தேதி தான் மொழி வழி மாநிலங்கள் பிறந்தன. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் உள்ளிட்டவை பிரிந்து சென்றன. அந்த மாநிலங்களில் இந்த நாளை சிறப்பாக மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையிலும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
1968 ஜூலை 18 ஆம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.