Tamil Nadu Latest News Updates: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
எப்ஐஆர் லீக்கான விவகாரம்
அப்போது நீதிபதிகள், யார் எப்ஐஆர் பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என கேள்வி எழுப்ப, எப்ஐஆர் கசிந்த விவகாரத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இயந்திர கோளாறு காரணமாக கசிந்தது என அரசு கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு இத்தனை மாதங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வேறு யாருக்கும் தொடர்பா...
தொடர்ந்து அரசு தரப்பில்,"அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்தபோது, ஞானசேகரன் தனது செல்போனை ஏரோபிளைன் மோடில் வைத்திருந்தார். ஏரோபிளைன் மோடில் இருந்ததால், அழைப்புகளை கண்காணிப்பதில் சிரமம் உள்ளது. வேறு யார் அந்த குறிப்பிட்ட பகுதியில் இருந்தார்கள் என்பதை செல்போன் நிறுவனங்களிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது" என வாதத்தை முன்வைத்தது.
தொடர்ந்து காவல்துறை தரப்பு,"மாணவி பாலியல் தொல்லை விசாரணை குறித்த உள்துறை செயலாளரின் அறிக்கை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையால் எப்.ஐ.ஆர் லீக் ஆகவில்லை. பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறோம். யார் வெளியிட்டது என ஓரிரு வாரங்களில் வெளிச்சத்துக்கு வரும்" என தங்களின் வாதத்தை முன்வைத்தது.
இதையடுத்து காவல்துறை ஆணையர், முதற்கட்ட விசாரணையில் ஒரு குற்றவாளி மட்டுமே இருப்பதாக தெரிவித்தார் என்றும் தொடர் விசாரணையில் தான் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும் என்றும் அரசு தரப்பு தெரிவித்தது.
காவல் ஆணையரின் பிரஸ்மீட்... கேள்விகளும் பதில்களும்!
இதற்கு,"அரசு ஊழியர்கள் விதிகளின்படி, காவல் ஆணையர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க முடியுமா? சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க ஆணையர் பத்திரக்கையாளர்களை சந்திக்க உரிமை உள்ளதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல் ஆணையர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் என்றும் பத்திரிக்கையாளர்களை ஆணையர் சந்திக்க கூடாது என விதிகள் ஏதும் இல்லை என்றும் அரசு தரப்பு பதிலளித்தது.
தொடர்ந்து, "செய்தியாளர் சந்திப்புக்கு அரசிடம் காவல் ஆணையர் அனுமதி பெறத் தேவையில்லை. ஆணையர் செய்தியாளர் சந்திப்பை நடத்த முடியும். ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரியவந்துள்ளதாக காவல் ஆணையர் ஊடகத்திற்கு பதில் அளித்தார். ஒருவர் குற்றவாளி என முடிவுக்கு வரவில்லை" என அரசு தரப்பு நீதிபதிகள் முன் விளக்கம் அளித்தது.
எல்லா குற்றச் சம்பவங்களுக்கும் இதேபோல ப்ரஸ்மீட் வைத்து பதிலளிக்கிறாரா?? என நீதிபதிகள் அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர். சட்ட ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, எந்தெந்த விவகாரங்களில் செய்தியாளர்களை சந்திக்க வேண்டுமென முடிவெடுத்து அவர் சந்திக்கிறார் என அரசு தரப்பு பதிலளித்தது.
மேலும் படிக்க | அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: துணை முதல்வர், அமைச்சருடன் குற்றவாளி!!
அண்ணா பல்கலைக்கழகத்தின் வாதம்
தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் (AAG) ஜே. ரவீந்திரன் நீதிமன்றத்திடம் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். அதில்,"இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். பாதிக்கப்பட்டவருக்கு பல்கலைக்கழகம் துணை நிற்கிறது" என்றார்.
பாதுகாவலர்கள் ஏன் அவரை விசாரிக்கவில்லை? என்றும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நீண்ட காலமாக நடந்து வருவதாகவும், சில பேராசிரியர்களும் இதற்கு உடந்தை எனவும் முன்னாள் மாணவர்கள் சிலர் கூறியுள்ளனர் என நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்டறிய ஒரு குழுவை அமைத்துள்ளோம் என ஏஏஜி பதிலளித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியை அதே பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் கூற, அதனை பல்கலைக்கழக தரப்பு,"நிச்சயமாக..." என பதிலளித்தது.
குற்றஞ்சாட்டப்படுபவரின் அடையாளம் வெளியிடலாமா?
பொதுநல மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், "அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கு முன் குற்றஞ்சாட்டப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடக்கூடாது. ஏனெனில் இது வழக்கு விசாரணைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என வாதத்தை முன்வைத்தார். இதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் என நீதிபதிகள் பதிலளித்தனர்.
மற்ற பொதுநல மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மற்றும் பாஜகவைச் சேர்ந்த ஏ.எஸ். மோகன்தாஸ் ஆகியோரும் வாதங்களை முன்வைத்தனர். ஜி.எஸ். மணி,"குற்றஞ்சாட்டப்பட்டவர் திமுக தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்". அதற்கு நீதிபதி லட்சுமிநாராயணன், "எங்களுடன் சேர்ந்து பலர் புகைப்படம் எடுக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு நாங்கள் உடந்தையாக இருக்கிறோமா?" என்றார்.
3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்
தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்,"அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரத்தை விசாரிக்க 3 பெண்களை கொண்ட ஐபிஎஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. ஒரு குற்றம் நடைபெற்றால் அதில் பெண் தான் குற்றம் சாட்டப்படுகிறார். ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும். பெண்கள் இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பெண்கள் மீது குற்றம் சாட்டப்படுவது குற்றவாளிக்கு சாதகமாகிவிடும்.
மாணவிக்கு பாராட்டு
தனிப்பட்ட முறையில் பேசுவது ஒன்றும் தவறு இல்லை. அது அவர்களுக்கான உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. ஆண் என்பதற்காக, பெண்களை தொட உரிமை இல்லை. பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை இந்த சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவியின் அடையாளத்தை எப்ஐஆர்-இல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. எப்ஐஆர் லீக் ஆனதால் மாணவியும் குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இப்படி தகவல் லீக் ஆனால் குற்ற சம்பவத்தை எதிர்த்து காவல்துறையை நாடுவதில் சிக்கல் ஏற்படும். விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகார் அளித்ததற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறது இந்த நீதிமன்றம்" என்றனர்.
ரூ.25 லட்சம் இழப்பீடு
தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் எப்ஐஆர் வெளியான வழக்கை விசாரிக்க சினேகா பிரியா, அய்மன் ஜமால், சரோஜா ஆகியோர் அடங்கிய அனைத்து மகளிர் ஐபிஎஸ் அதிகாரிகளின் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டனர். எப்ஐஆர் வெளியானதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு தரப்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவி கல்வியைத் தொடர இலவசக் கல்வி மற்றும் தங்கும் விடுதி வசதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் எஃப்.ஐ.ஆர் வரும் காலங்களில் வெளியாகாமல் இருப்பதை உறுதி செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.
இரண்டு பொதுநல வழக்குகளையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், செய்தியாளர் சந்திப்பை நடத்தி விசாரணை விவரங்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததற்காக, சென்னை ஆணையர் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - காவல்துறை முக்கிய எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ