அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் எங்களது குறி கிடையாது. அமர்நாத் யாத்திரிகளை நாங்கள் என்றுமே தாக்கியது கிடையாது. எங்கள் போர் இந்தியாவுடன் தான். இந்திய மக்களுடன் கிடையாது என ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
அமர்நாத் குடைவரைகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.
அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்.
இந்த வருட அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்ககும்படி மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த புனித யாத்திரையின் முதல் குழு பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்றது. முதல் குழுவை அம்மாநில தலைமைச் செயலாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில், அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டு வருவதாக வெளியான செய்தியை அந்த அமைப்பு மறுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு வெளியிட்ட ஒரு வீடியோவில்,
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் எங்களது குறி கிடையாது. அவர்கள் புனித பயணமாக இங்கு வருகிறார்கள். அவர்கள் எங்களின் விருந்தாளிகள். அமர்நாத் யாத்திரிகளை நாங்கள் என்றுமே தாக்கியது கிடையாது. ஆயுதம் ஏந்துபவர்களை மட்டுமே எதிர்ப்போம். எங்கள் போர் இந்தியாவுடன் தான். இந்திய மக்களுடன் கிடையாது என்று வீடியோவில் கூறியுள்ளார்.