4 தொகுதிகளில் வாக்குபதிவு நிறைவு

Last Updated : Nov 19, 2016, 05:44 PM IST
4 தொகுதிகளில் வாக்குபதிவு நிறைவு title=

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்தல் மற்றும் பணப்புழக்கம் குற்றச்சாட்டு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் அதிமுக - எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்தார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் எம்எல்ஏ ஜான்குமார் பதவியை ராஜினாமா செய்தார். இந்த 4 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. 

நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டார்.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக , திமுக , பாஜக ,  தேமுதிக , பாமக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 39 பேர் களத்தில் உள்ளனர். 

தஞ்சை தொகுதியில் அதிமுக , திமுக , பாஜக ,  தேமுதிக , பாமக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 14 பேர் போட்டியிட்டார். 

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக , திமுக , பாஜக ,  தேமுதிக , பாமக, நாம் தமிழர் கட்சி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

இன்று காலை, 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை, 5:00 மணி வரை நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை வரும் 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவுக்காக தஞ்சையில் 276 வாக்குச்சாவடிகளும், அரவக்குறிச்சியில் 245, திருப்பரங்குன்றத்தில் 291, புதுவை நெல்லித்தோப்பில் 26 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், வாக்குப்பதிவை முன்னிட்டு, நான்கு தொகுதிகளிலும், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, தலைமை செயலகத்தில் இருந்து வாக்குப்பதிவுகள் கண்காணிக்கப்பட்டன.

மாலை 3 மணி நிலவரப்படி, தஞ்சையில் 60.54 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 62.76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல், புதுவை நெல்லித்தோப்பில், மாலை 5 மணி நிலவரப்படி, 81.17 சதவீதமும், அரவக்குறிச்சியில் 80.92 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வருகிற  22-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

Trending News