27 மீனவர்கள் கைது: மீனவர்களை காப்பாற்ற நிரந்தரத் தீர்வு தேவை: PMK

தமிழக மீனவர்கள் 27 பேரை கைது செய்த இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு தேவை வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை! 

Last Updated : Jan 14, 2019, 05:42 PM IST
27 மீனவர்கள் கைது: மீனவர்களை காப்பாற்ற நிரந்தரத் தீர்வு தேவை: PMK  title=

தமிழக மீனவர்கள் 27 பேரை கைது செய்த இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு தேவை வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை! 

இலங்கையின் கச்சத்தீவு பகுதில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடன் இருந்து 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களை வரும் 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், 27 மீனவர்கள் கைது: சிங்களப் படையிடம் இருந்து காப்பாற்ற நிரந்தரத் தீர்வு தேவை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் 27 பேரை சிங்களப்படையினர் கைது செய்துள்ளனர். மற்றொரு குழு மீனவர்களின் படகையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதில் மாயமான ஒரு மீனவரின் நிலை என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர்  இரு படகுகளில் சனிக்கிழமையன்று வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரும் அவர்களின் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு நிகழ்வில் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் படகு மீது சிங்களப் படையினர் தங்களின் கடற்படைப் படகைக் கொண்டு மோதியுள்ளனர். 

இத்தாக்குதலில் அப்படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த நால்வரும் கடலில் மூழ்கிவிட்ட நிலையில், அவர்களில் மூவரை மட்டும் சிங்களப் படையினர் மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர். மாரிச்சாமி என்ற கடலில் மூழ்கிய மீனவர் இதுவரை மீட்கப்படவில்லை. அவர் என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. மற்றொரு படகில் மீன் பிடித்த நால்வரையும் சிங்களப்படை சிறை பிடித்தது.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை விடுதலை செய்வதாகவும்,  தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 47 படகுகள் விடுவிக்கப்படும் என்றும் சில நாட்களுக்கு முன்பு தான் இலங்கை அரசு அறிவித்தது. இதனால், தமிழக மீனவர்கள் தொடர்பான சிங்கள ஆட்சியாளர்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான வெறுப்பு இலங்கை அரசு மற்றும் சிங்களக் கடற்படையினரின் மனங்களிலிருந்து அகலவில்லை என்பதை சனிக்கிழமை இரவு நிகழ்ந்த தாக்குதல் மற்றும் கைது நிகழ்வு உறுதி செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதல் இன்றோ, நேற்றோ நடக்கும் நிகழ்வு அல்ல. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்களை கைது செய்வது, சுட்டுக்கொல்வது,  தாக்குதல் நடத்துவது, கடலில் தள்ளிவிடுவது என சிங்களப் படையினரின் அத்துமீறல்களும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. இதுதொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே  பல உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்ட போதி\லும் கூட சாதகமான எந்த மாற்றமும் நிகழவில்லை.

மாறாக, கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்களுக்கு எதிராக சிங்கள அரசின் நடவடிக்கைகள்  கடுமையாகியுள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகளை  திருப்பித் தர இலங்கை அரசு மறுத்து வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால், கண்டிப்பாக 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.1.50 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. அச்சட்டத்தின்படி தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை அரசின் இந்த அத்துமீறல்கள் எதையும் இந்தியா கண்டிக்காதது தான் இலங்கைக்கு அதீத துணிச்சலை தந்துள்ளது.

உலகில் வேறு எந்த நாட்டிலும் அண்டை நாட்டு மீனவர்கள் மீது வன்மத்துடன் தாக்குதல் நடத்தப் படுவதில்லை. இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க வரும் இலங்கை மீனவர்கள் கூட கண்ணியத்துடன் தான் நடத்தப்படுகின்றனர். ஆனால், இலங்கை அரசு மட்டும் தான் தமிழக மீனவர்களை தாக்குவது, கைது செய்தால் உடனடியாக விடுதலை செய்யாமல் 3 மாதங்கள் வரை சிறையில் அடைத்து வைப்பது. லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் அபராதம் விதிப்பது, பறிமுதல் செய்த படகுகளை திருப்பித் தர மறுப்பது உள்ளிட்ட கொடுமைகளை இழைத்து வருகிறது. இந்தியாவிடம் ஏராளமான உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் இலங்கை அரசு, இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் செயல் என்பதில் சந்தேகமேயில்லை. இலங்கையின் இத்தகைய அத்துமீறல்களை இந்தியா இன்னும் எவ்வளவு நாளைக்கு அனுமதிக்கப் போகிறது?

சிங்களப் படையினரின் அத்துமீறல்கள் நீடித்தால்,  தூத்துக்குடி முதல் நாகப்பட்டினம் வரையிலான கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்க நேரிடும். எனவே, உடனடியாக கைது செய்யப்பட்ட 27 மீனவர்களையும்  அவர்களின் படகுகளுடன் விடுவித்து சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; கடலில் மூழ்கி மாயமான மீனவர் மாரிச்சாமியை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு, தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இரு தரப்பு கடல் பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மீன் பிடிக்க வகை செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்....  

 

Trending News