இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிக மோசமான உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல்!
உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசிய யுஸ்வேந்திர சாஹல் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 88 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் 28-வயது இளம் வீரர் உலக கோப்பை தொடர்களில் மிக அதிக ரன் கொடுத்த இந்திய வீரர் என்னும் மோசமான சாதனையினை படைத்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 38-வது லீக் ஆட்டம் எட்க்பாஸ்டன், பிர்மிங்க்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியின் ரன் குவிப்புக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு சாதகமாய் அமைந்தது.
அந்த வகையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தான் வீசிய 10 ஓவர்களில் 88 ரன்கள் கொடுத்தார். சாஹல் விளையாடி ஒருநாள் போட்டிகளில் இதுவே அவரது மோசமான எண்ணிக்கை ஆகும். அதே வேளையில் உலக கோப்பை தொடர்களில் மிக அதிக ரன் கொடுத்தவரும் இவரே.
இவருக்கு முன்னதாக இந்திய அணியின் ஜவகல் ஸ்ரீநாத் அவர்கள் 87 ரன்கள் கொடுத்து இந்த மோசமான சாதனையினை தக்க வைத்திருந்தார். 2003-ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஸ்ரீநாத் அளித்த 87 ரன்களே இதுவரை அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்நிலையில் இன்று சாஹல் அளித்த 88 ரன்கள், ஸ்ரீநாத் பெயரை இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளியுள்ளது.
இன்றைய போட்டியல் இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தான் வீசிய 10 ஓவர்களில் 72 ரன்கள் அளித்தார். எனினும் குல்தீப் யாதவ் ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் ஒரு விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.