விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரையும் இந்தியா வென்றதை அடுத்து தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி மயங்க அகர்வால்(55), விராட் கோலி(76) மற்றும் இஷாந்த் சர்மா(57) ஆகியோரின் அரைசதத்தாலும், ஹனுமா விஹாரியின் சதத்தாலும் (111) 416 ரன்களை குவித்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்க்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 10 விக்கெட் இழப்புக்கு வெறும் 117 ரன்கள் மட்டும் எடுத்தது. இதில் ஹாட்ரிக் சாதனையோடு 6 விக்கெட்டை கைப்பற்றினார் ஜஸ்பிரித் பும்ரா. பின்னர் 299 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 54.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. மூன்றாம் நேர ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் 45 ரன்கள் எடுத்தது. இன்று நான்காவது நாள் தொடர்ந்து ஆட உள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 423 ரன்கள் தேவை. அவர்களிடம் 8 விக்கெட் கைவசம் உள்ளது.