சக்கரவர்த்தி முதல் ஸ்ரீசாந்த் வரை தமிழ் படங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்கள்

வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டராக களத்துக்கு வருவதற்கு முன்பே திரைப்படத்தில் நடித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 23, 2022, 06:37 AM IST
  • தமிழ் சினிமாவில் நடித்திருக்கும் கிரிக்கெட் வீரர்கள்
  • ஜீவா படத்தில் நடித்திருந்தார் வருண் சக்ரவர்த்தி
  • விக்னேஷ் சிவன் படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீசாந்த்
சக்கரவர்த்தி முதல் ஸ்ரீசாந்த் வரை தமிழ் படங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்கள்  title=

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் டிப்பம் டப்பம் பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் நடிகை சமந்தாவுக்கு அருகில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அமர்ந்திருக்கிறார். கிரிகெட்டில் இருந்து விடை பெற்ற பிறகு சினிமா அவதாரம் எடுத்திருக்கும் ஸ்ரீசாந்த், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு முன்பே இந்திய அணிக்காக விளையாடிய சிலர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.  

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

1990-ல் வெளியான ’ராஜா கைய வச்சா’ படத்தில் ஹீரோவாக நடிகர் பிரபு நடித்திருப்பார். இப்படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் பிரபுவுடன் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க | வெளியானது சாணிக்காயிதம் டீசர்... படம் அமேசானில் ரிலீஸ்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

முதல் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த கிருஷ்ணாச்சாரி ஸ்ரீகாந்த், மாதவனுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான பிரியமான தோழி படத்தில் கிரிக்கெட் வீரராக மாதவன் நடித்திருந்தார். அவருடன் ஸ்ரீகாந்தும் நடித்திருப்பார். இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் இப்படம் வெளியானது.  

சடகோபன் ரமேஷ்

2008 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற சந்தோஷ் சுப்ரமணியம் படத்தல் சடகோபன் ரமேஷ் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் ஜெயம் ரவியின் அண்ணனாக ரமேஷ் நடித்துள்ளார். தொடர்ந்து போட்டா போட்டி படத்திலும் சடகோபன் ரமேஷ் நடித்திருந்தார்.

வருண் சக்ரவர்த்தி

இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கிரிக்கெட் மைதானத்தில் அறிமுகமாகும் முன்பே திரைப்படங்களில் நடித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஜீவா படத்தில் அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஐபிஎல்லில் வருண் சக்ரவர்த்தி சிறப்பாக விளையாடிய பிறகே, ஜீவா படத்தில் அவர் நடித்தது பலருக்கு தெரியவந்தது.

ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவானாக இருந்த ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரில் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடினார். சென்னை அணிக்காக விளையாடியபோது தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக மாறினார். 2021 ஆம் ஆண்டு வெளியான டிக்கிலோனா மற்றும் பிரண்ட்ஷிப் ஆகிய படங்களிலும் நடித்தார். வெப் சீரிஸ் ஒன்றிலும் அவர் நடித்தார்.

இர்பான் பதான்

இந்திய அணியின் ஆல்ரவுண்டராக இருந்த இர்பான் பதான் விரைவில் வெளியாக இருக்கும் கோப்ரா படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். விக்ரம் நடித்திருக்கும் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இர்பான் பதானின் கேரக்டரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் களமிறங்க இருக்கும் புதிய வாரிசு நடிகர்

ஸ்ரீசாந்த்

கிரிக்கெட் உலகில் சர்ச்சைகளை சுற்றியே இருந்த ஸ்ரீசாந்த், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றம் மூலம் விடுதலை பெற்றார். மீண்டும் ஐபிஎல் விளையாட முயற்சித்தபோதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நடிகராக அவதாரமெடுத்துள்ளார். தமிழில் விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News