அனல் பறக்கும் WTC Final: முதல் நாளே ஆரம்பித்த மோதல்... லபுஷேன் விரலை பதம்பார்த்த சிராஜ்!

WTC Final 2023 Score Updates: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடங்கிய நிலையில், லபுஷேன் - சிராஜ் ஆகியோருக்கு களத்தில் நடந்த மோதல் போட்டியை விறுவிறுப்பாக்கியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 7, 2023, 06:04 PM IST
  • ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
  • ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளைக்கு முன்னர் வரை 73/2 என்ற நிலையில் இருந்தது.
  • முதல் செஷனில் 23 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஜடேஜா ஒரு ஓவர் கூட வீசவில்லை.
அனல் பறக்கும் WTC Final: முதல் நாளே ஆரம்பித்த மோதல்... லபுஷேன் விரலை பதம்பார்த்த சிராஜ்! title=

World Test Championship Final 2023 Updates: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன் 7) தொடங்கியது. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, தற்போது இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று, கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இந்தியாவுக்கு சாதகமான டாஸ்

இந்நிலையில், போட்டி மதியம் 3 மணிக்கு தொடங்கியது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது இந்திய அணிக்கு மிகப்பெரும் சாதகமாக கருதப்படுகிறது. அதாவது, ஓவல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும் வேளையில், பந்துவீச்சாளர்களுக்கு புது பந்தில் ஸ்விங் நன்றாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், 4ஆவது, 5ஆவது நாளில் இங்கு பேட்டிங் மேலும் சுலபமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

அஸ்வின் இல்லை

இந்த 5 நாள்களிலும் போட்டியில் மழை வர வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டதால், இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர், 1 சுழற்பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலியாவின் 4:1 பாணியில் களமிறங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டாம் போலாண்ட், கேம்ரூன் கிரீன், நாதன் லயான் உள்ளிட்டோர் பிளேயிங் லெவனில் இருக்க, இந்தியா தரப்பில் முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜடேஜா ஆகியோர் உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் இப்போட்டியில் விளையாடவில்லை. கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்டார். 

நேர்த்தியான திட்டம்

ஆஸ்திரேலிய அணிக்கு வழக்கம்போல் டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா என இரண்டு இடதுகை பேட்டர்கள் ஓப்பனிங் இறங்கினர். ஷமி, சிராஜ் ஆகியோர் ஓப்பனிங் ஸ்பெல்லை வீசினர். வார்னருக்கு அரவுண்ட தி விக்கெட்டிலும், கவாஜாவிற்கு ஓவர் தி விக்கெட்டிலும் தொடர்ந்து பந்துவீசினர். சிராஜ் முதலில் இருந்தே கவாஜாவை அச்சுறுத்தி வந்தார்.  

மேலும் படிக்க | IND vs AUS: WTC 2023 இறுதி போட்டியை இலவசமாக பார்ப்பது எப்படி?

டக் அவுட்டான கவாஜா

அதில், சிராஜ் வீசிய நான்காவது ஓவரில் கவாஜா எட்ஜ் வாங்கி, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட்டானர். அவர் 10 பந்துகளை சந்தித்திருந்தார். கிரீஸில் பின்னாடிய நின்று விளையாடிய அவர், முறையாக தடுப்பாட்டத்தை செய்யாத காரணத்தால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

வீழ்ந்தார் வார்னர்

இதையடுத்து, ஜோடி சேர்ந்த லபுஷேன் - வார்னர் ஜோடி வேகமாக ரன்கள் ஓடியும், அடிக்கடி பவுண்டரிகளை அடித்தும் ரன்களை சீராக வேகத்தில் எடுத்தனர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் சற்று திணறினர் என கூறலாம். ஷமி - சிராஜ் ஸ்பெல்லை அடுத்து உமேஷ் யாதவ் - ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இரண்டாவது ஸ்பெல்லை வீசினர். 12ஆவது ஓவர் வரை முதல் ஸ்பெல் வீசப்பட்டது. இரண்டாவது ஸ்பெல்லிலும் விக்கெட் விழாமல் இருந்தபோது, ஷர்துல் வீசிய 22ஆவது ஓவரில் வார்னர், கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 8 பவுண்டரிகளை அடித்திருந்தார். 

முதல் செஷனின் முடிவில்...

இதையடுத்து, லபுஷேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் வரை 23 ஓவர்கள் வீசப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்களை வீசியுள்ளது. முதல் செஷனில் இந்தியா சுழற்பந்துவீச்சாளரை களமிறக்கவில்லை. அடுத்த செஷனில் பிற்பகுதியில் ரோஹித் ஜடேஜாவை முயற்சிப்பார் என தெரிகிறது. லபுஷேன் 26 ரன்களுடனும், ஸ்மித் 2 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். 

சிராஜ் - லபுஷேன் மோதல் 

இந்நிலையில், நான்காவது ஓவரில் கவாஜாவின் விக்கெட்டை எடுத்த சிராஜ், அவரது அடுத்த ஓவரான ஆறாவது ஓவரின்போது லபுஷேனுடன் சிறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் அடங்கி, 8ஆவது ஓவரை வீச வந்த சிராஜ், முதலில் சர்ஃபரைஸாக சின்ன பவுண்சரை போட, அது லபுஷேனின் வலதுகை கட்டைவிரலை பதம் பார்த்தது. 

அதன் வலியில் லபுஷேன் துடித்தார். பின்னர், அவருக்கு களத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிராஜ் இன்றைய போட்டியில் நல்ல வேகத்தில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அவர் 6 ஓவர்களை வீசி 16 ரன்களை கொடுத்துள்ளார். அதிலும், 2 ஓவர்கள் மெய்டன் மற்றும் 1 விக்கெட் ஆகும். 

மேலும் படிக்க | WTC Final 2023: சச்சின், டான் பிராட்மேனின் சாதனைகளை தகர்க்கப்போகும் விராட் கோலி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News