இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 62(33) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக KL ராகுல் 52(35) ரன்கள் குவித்தார். வங்கதேசம் தரப்பில் ஷபிக்புல் இஸ்லாம், சௌமயா சர்கார் தலா இரண்டு விக்கெட்டுகள் குவித்தனர்.
#TeamIndia win by 30 runs to clinch the three-match series 2-1.#INDvBAN pic.twitter.com/vChBI1jjxW
— BCCI (@BCCI) November 10, 2019
இதனையடுத்து 175 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர் மொஹமது நாயிம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 81(48) ரன்கள் குவித்தார். எனினும் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற ஆட்டத்தின் 19.2-வது பந்தில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்த வங்கதேச அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய பந்துவீச்சாளர்கள் தீபக் சஹர் 6 விக்கெட், சிவம் தூபே 3 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 14 துவங்கி இந்தூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.