இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியை 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
டி-20 தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று இரவு 7 மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 196 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் சாகல், சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ரோகித் 5 ரன்னுடனும், தவான் ஒரு ரன்னுடனும் வெளியேறினர்.
அதன்பின் ஷ்ரேயஸ் ஐயரும், விராட் கோலி களமிறங்கினர். ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன்னில் வெளியேறினார். விராட் கோலி 42 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். டோனி 37 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49 ரன்களில் அவுட்டானார். புவனேஷ்வர் குமார் 2 ரன்னுடனும், பும்ரா ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. வரும் 7-ம் தேதி மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.