#MeeToo பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோகரி மீது குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் விட்டுவைக்காத #MeeToo ஹேஷ்டேக்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2018, 01:44 PM IST
#MeeToo பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோகரி மீது குற்றச்சாட்டு title=

#MeeToo என்ற ஹேஷ்டேக் மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஹாலிவுட்டில் தொடங்கிய இந்த ஹேஷ்டேக், தற்போது சில தினங்களாக இந்தியாவில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்த ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இதில் பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் குறித்து புகார்களைக் கொடுத்து வருகிறார். தமிழ்நாட்டை பொருத்த வரை வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அதேபோல அரசியல்வாதிகள் மற்றும் ஆன்மிகவாதிகள் மீதும் தொடர்ந்து பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் #MeeToo மூலம் விளையாட்டு துறையும் தற்போது சிக்கி உள்ளது. ஆம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோகரி பெயரும் வந்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை பொருத்த வரை முதலில் இலங்கை அணியின் முன்னால் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா, மற்றும் மலிங்காவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. தற்போது பிசிசிஐ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோகரி குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பணியாற்றி வருகிறார்.

இவர் மீது குற்றச்சாட்டை சுமத்தியவர் பத்திரிக்கையாளர் ஹர்னித் கவுர் ஆவார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் ஜோகரி மீது குற்றச்சாட்டிய பெண்ணின் கட்டுரையை பகிர்ந்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் குறிப்பிடவில்லை. அந்த கட்டுரையில் ராகுல் ஜோகரி, தன்னை பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகினார் என்று அந்த பெண்மணி கூறியுள்ளார்.

 

 

Trending News