IPL 2023: தோனி செய்ய முடியாததை செய்துகாட்டிய அப்துல் சமாத்... ராஜஸ்தானை வீழ்த்திய ஹைதராபாத்!

IPL 2023 RR vs SRH: ஐபிஎல் தொடரில் இன்று பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

Written by - Sudharsan G | Last Updated : May 8, 2023, 12:11 AM IST
  • ஆட்ட நாயகனாக பிளிப்ஸ் தேர்வானார்.
  • பிளிப்ஸ் முக்கியமான 19ஆவது ஓவரில் 3 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்தார்.
  • பட்லர், சாம்சன் ஆகியோரின் அதிரடி ஆட்டம் வீணானது.
IPL 2023: தோனி செய்ய முடியாததை செய்துகாட்டிய அப்துல் சமாத்... ராஜஸ்தானை வீழ்த்திய ஹைதராபாத்! title=

IPL 2023 RR vs SRH: நடப்பு ஐபிஎல் தொடரின் 52ஆவது லீக் போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, ஜெய்ஸ்வால் - பட்லர் இணை வழக்கமான அதிரடியை தொடர்ந்தது. 5 ஓவர்களுக்கு 54 ரன்களை அந்த இணை குவித்தபோது, ஜெய்ஸ்வால் 35 (18) ரன்களில் யான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பின் பட்லர் உடன் ஜோடி சேர்ந்த சாம்சன் தொடர்ந்து பவுண்டரிகளை குவிக்க தொடங்கினார். 

பட்டாசாய் வெடித்த பட்லர்

இந்த ஜோடி இணைந்து 138 ரன்களை குவித்தபோது, 19ஆவது ஓவரில் பட்லர் 95(59) ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், 10 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடக்கம். பட்லர் ஆட்டமிழந்தாலும், சஞ்சு சாம்சன் நடராஜன் வீசிய கடைசி ஓவரிலும் ரன்களை குவிக்க 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ரன்களை ராஜஸ்தான் எடுத்தது. 

சாம்சன் சரவெடி

சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 66 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். புவனேஷ்வர் குமார், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தி இருவரும் தலா 44 ரன்களை கொடுத்தனர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்த மார்க்கண்டே இன்றைய போட்டியில் 4 ஓவர்களில் 51 ரன்களை கொடுத்தார். 

மேலும் படிக்க | 'ரோகித் இது நல்லா இல்ல போய்டுங்க' கவாஸ்கர் காட்டமாக சொன்ன விஷயம்

பவர்பிளேவில் மிரட்டல்

217 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, அன்மோல்பிரீத் சிங் ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியும் பவர்பிளே ஓவர்களில் ரன்களை குவிக்க தொடங்கியது. இந்த ஜோடி 5.5 ஓவர்களில் 51 ரன்களை எடுத்திருந்தது. அப்போது அன்மோல்பிரீத் சிங் 33(25) ரன்களில் ஆட்டமிழந்தார். 

காட்டு காட்டிய கிளேசன்

இதையடுத்து, ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஜோடி சன்ரைசர்ஸ் அணியை நிதானமாக இலக்கை நோக்கி அழைத்துச்சென்றது. இந்த ஜோடி, 65 ரன்களை குவித்தபோது, அபிஷேக் சர்மா 55(34) ரன்களில் ஆட்டமிழந்தார். நான்காவது வீரராக களமிறங்கிய கிளேசனும் 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 26 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். 

பினிஷிங் பிளிப்ஸ்

மறுபுறம் சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கை அளித்துவந்த திரிபாதி 47(29) ரன்களில் சஹால் பந்துவீச்சில் நடையைக்கட்டினார். கேப்டன் மார்க்கரமும் 6 ரன்களில் வெளியேறினார். இதனால், சன்ரைசர்ஸ் அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில், பிளிப்ஸ், அப்துல் சமத் ஆகியோர் இருந்தனர்.

அந்த 19ஆவது ஓவரை இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் குல்திப் யாதவ் வீசினார். அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்ட பிளிப்ஸ், நான்காவது பந்தை பவுண்டரி அடித்து போட்டிக்கு உயிர்கொடுத்தார். இருப்பினும், அவர் அடுத்த பந்தே கேட்ச் கொடுத்து 25(7) ரன்களில் நடையைக்கட்ட, யான்சன் கடைசி பந்தில் 2 ரன்களை எடுத்து, கடைசி ஓவர் ஸ்ட்ரைக்கை அப்துல் சமதிடம் ஒப்படைத்தார். 

கடைசி ஓவரை வீசிய சந்தீப்

அந்த ஓவரை சந்தீப் சர்மா வீசிய நிலையில், முதல் பந்தில் வந்த கேட்ச்சை ஓபெட் தவறவிட்டார். இதில், அப்துல் சமத் தப்பித்து, இரண்டு ரன்களையும் எடுத்தார். அடுத்த 2ஆவது பந்தை நேராக சிக்ஸ் அடித்து மிரட்டினார். மூன்றாவது பந்தில் டபுள்ஸ், நான்காவது, ஐந்தாவது பந்தில் தலா 1 சிங்கிள்ஸ் என அடிக்க கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 

மேலும் படிக்க | குஜராத்தை கரைசேர்த்த தோனி பட்டறையின் பவுலர்... லக்னோவை தொடரும் தோல்வி!

கடைசி பந்து த்ரில்

கடைசி பந்தை அப்துல் சமாத் தூக்கியடிக்க பந்து லாங்-ஆப் திசையில் நின்ற பட்லரின் கையில் தஞ்சம் அடைந்தது. இதனால், ராஜஸ்தான் வெற்றி பெற்றதாக நிம்மதி பெருமூச்சுவிட்ட அந்த சூழலில், கடைசி பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால், அப்துல் சமத் ஆட்டமிழக்கவில்லை என்றும் கடைசி பந்து ஃப்ரீ-ஹிட் எனவும் அறிவிக்கப்பட்டது. 

சிக்ஸ் உடன் முடித்த சமத்

இதையடுத்து, கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து, அப்துல் சமாத் ஆட்டத்தை முடித்து வைத்தார். இத்தொடரில் சேப்பாக்கத்தில் நடந்த இதேபோன்ற தருணத்தில், தோனியை கடைசி பந்தில் பவுண்டரி அடிக்கவிடாமல் தடுத்து ராஜஸ்தான் வெற்றிக்கு சந்தீப் சர்மா வழிவகுப்பார். ஆனால், இன்று அப்துல் சமத் அவரின் ஓவரிலேயே சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். 

ஆட்டநாயகன் பிளிப்ஸ்

இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, தனது நான்காவது வெற்றியை பெற்றுள்ளது. அப்துல் சமத் 7 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்பட 17 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ராஜஸ்தான் பந்துவீச்சு தரப்பில் சஹால் அருமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 29 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்திப் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 19ஆவது ஓவரில் முக்கியமான தருணத்தில் மூன்று சிக்ஸர்கள், 1 பவுண்டரிகளை தொடர்ந்து அடித்து வெறும் 7 பந்துகளில் 25 ரன்களை குவித்த பிளிப்ஸ் ஆட்டநாயகனாக தேர்வானார்.

புள்ளிகள் பட்டியல்

புள்ளிப்பட்டியில், ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் விளையாடி (5 வெற்றி, 6 தோல்வி) என 10 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி (4 வெற்றி, 6 தோல்வி) என 8 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளன. 

மேலும் படிக்க | ICC World Cup 2023: 'இந்த கண்டீஷனுக்கு ஓகே சொன்னா நாங்க இந்தியா வரோம்' - பாகிஸ்தானின் பிளான் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News