IPL 2020: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றி!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Last Updated : Oct 13, 2020, 05:55 AM IST
IPL 2020: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றி!! title=

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

IPL 2020 தொடரின் 28-வது லீக் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற RCB பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சீரான வேகத்தில் ரன்கள் அடித்தனர். தேவ்தத் படிக்கல் 32 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ரஸ்செல் வீசிய ஓவரில் முதல் பந்தில் சிக்சர் தூக்கிய தேவ்தத் படிக்கல், அதே ஓவரில் போல்டு ஆனார். இதை அடுத்து கேப்டன் விராட்கோலி களம் இறங்கினார். நன்றாக ஆடிய ஆரோன் பிஞ்ச் 37 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் போல்டு ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 94 ரன்னாக (12.2 ஓவரில்) இருந்தது.

இதை தொடர்ந்து டி வில்லியர்ஸ், கோலியுடன் இணைந்தார். டி வில்லியர்ஸ் அதிரடியாக மட்டையை சுழற்றினார். அவர் கம்லேஷ் நாகர்கோட்டி மற்றும் கம்மின்ஸ் ஓவரில் தலா 2 சிக்சர்கள் தூக்கி கலக்கினார். அவர் அடித்த ஒரு சிக்சர் மைதானத்துக்கு வெளியே பறந்து காரை பதம் பார்த்தது. அத்துடன் ரஸ்செல் ஓவரில் டிவில்லியர்ஸ் சிக்சர் விளாசி 23 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். நடப்பு தொடரில் அவர் அடித்த 3-வது அரைசதம் இதுவாகும். வழக்கமாக ஆக்ரோஷமாக ஆடக்கூடிய விராட்கோலியின் ஆட்டத்தில் நேற்று வேகம் குறைவாகவே தெரிந்தது. அவர் டிவில்லியர்சுக்கு பக்கபலமாக இருந்தார்.

ALSO READ | விராட் கோலி திருமணத்திற்கு முன் டேட்டிங் செய்த ஆறு அழகிகள் யார் தெரியுமா?

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் 83 ரன்கள் திரட்டப்பட்டது. விராட்கோலி 28 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 33 ரன்களும், டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 73 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர் 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. 

டாம் பான்டன் 8 ரன்னிலும், நிதிஷ் ராணா 9 ரன்னிலும், சுப்மான் கில் 34 ரன்னிலும் (25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும், இயான் மோர்கன் 8 ரன்னிலும், ரஸ்செல் 16 ரன்னிலும், கம்மின்ஸ் 1 ரன்னிலும், ராகுல் திரிபாதி 16 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களே எடுத்தது. 

இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். 7-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். கொல்கத்தா அணி 3-வது தோல்வியை சந்தித்தது.

Trending News